திருப்புவனம்; சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் 6ம் கட்ட அகழாய்வில் நேற்று எடைக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
தொல்லியல் துறை சார்பில் கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம் மற்றும் மணலுார் ஆகிய இடங்களில் அகழாய்வு பணி நடைபெற்று வருகின்றன.தற்போது கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமான தொடர்ச்சி கண்டறியப்பட்டது. இந்த அகழாய்வுக் குழி ஒன்றில் இரும்பு உலை அமைப்பும் தற்போது கண்டெடுக்கப்பட்டது.
அந்த அகழாய்வு குழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள குழிகளில் நேற்று பல்வேறு அளவுகளில் கருங்கல்லால் ஆன நான்கு எடைக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உருளை வடிவில் அதன் கீழ்பகுதி தட்டையாகவும் உள்ளது. இந்த கற்கள் முறையே 8,18,150 மற்றும் 300 கிராம் எடையில் உள்ளன. இந்த அகழாய்வு பகுதியானது தொழிற்சாலை அமைப்பை கொண்டுள்ளது. உலை அமைப்பு, இரும்புத் துண்டுகள், இரும்பு ஆணிகள், மூலப்பொருட்களை உருக்கிய பின்னர் வெளியேறும் கசடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனவே இங்கு தொழிற்சாலைகள் செயல்பட்டிருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.