ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்திற்கு மே 18 ல் வரும் சிருங்கேரி சாரதாபீடம் பாரதி தீர்த்த சங்கராச்சாரியார் சுவாமிகள், ராமநாதசுவாமி கோயிலில் ரூ.2 கோடியில் கட்டப்பட்டு வரும் தெற்கு ராஜகோபுரத்திற்கு நிலைக்கால் வைக்கும் பணியை துவக்கி வைக்கிறார். மே 17ல் ராமநாதபுரம் வரும் அவர், சேதுபதி அரண்மனையில் உள்ள ராஜ ராஜேஸ்வரி அம்பாளுக்கு சிறப்பு பூஜை செய்கிறார். அன்று இரவு 8.30 மணிக்கு, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் திருக்கல்யாண மேடையில், சந்திர மவுளீஸ்வரர் பூஜை செய்கிறார். மறுநாள் (மே 18) காலை 9 க்கு மேல் அம்மன் முன்மண்டபத்தில் புதிதாக மண்டபம் கட்டும் பணியை துவங்குவதற்கு சிறப்பு பூஜை செய்கிறார். பின், தெற்குரத வீதியில் ரூ.2 கோடியில் 91 அடி உயரத்திற்கு, இவரால் கட்டப்பட்டு வரும் கோயில் தெற்கு ராஜகோபுரத்தின் 26 அடி உயர கல்காரம் கட்டுமானத்திற்கு நிலைக்கால் அமைக்கும் பணியை துவக்கி வைக்கிறார். அதன்பின், சங்கர மடத்திற்கு சென்று பக்தர்களை சந்திக்கிறார். மே 19 ல் மதியத்திற்கு மேல் மீண்டும் பக்தர்களை சந்திக்கிறார். மாலை 3 மணிக்குமேல் சிவகங்கைக்கு செல்கிறார்.