பதிவு செய்த நாள்
15
மே
2012
10:05
வேலூர்: குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில், சிரசு திருவிழா நடந்தது. அதிகாலை, 4 மணிக்கு பிச்சனூர்பேட்டையில் இருந்து கெங்கையம்மனுக்கு தாரை, தப்பட்டை, மேள தாளங்களுடன் சீர் வரிசை எடுத்து வரப்பட்டது. தரணம் பேட்டை முத்தியாலம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. மாலை 5 மணிக்கு சிரசு ஊர்வலம் புறப்பட்டது. தரணம் பேட்டை என்.ஜி., செட்டி தெரு, காந்தி ரோடு வழியாக காலை 9 மணிக்கு சிரசு கோவிலை வந்து சேர்ந்தது. சிரசு ஊர்வலம் வரும் வழியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி நின்று அம்மனுக்கு தங்களின் நேர்தி கடனை செலுத்தும் வகையில் மாலை அணிவித்தும், கற்பூரம் ஏற்றியும் லட்சக்கணக்கான சூறை தேங்காய்களை உடைத்தும் வழிபட்டனர். தன்னை வணக்கும் பக்தர்களுக்கு அருள் பாலித்தபடியும், பக்தர்களின் நேர்த்திக் கடனை சுமந்து கொண்டும் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் நடந்தது. கோவில் சிரசு மண்டபத்தில் உள்ள, ஏழு அடி உயர சண்டாளச்சி உடலில் அம்மன் சிரசு பொறுத்தப்பட்டது. காலை 10 மணிக்கு ஊர் மக்களின் சார்பில், கூழ் வார்த்தல் நடந்தது. பின்னர் கெங்கையம்மன் சாந்தம் அடைந்து சாந்த சோரூபியாக மாறினாள். காலை 10. 30 மணிக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இரவு வரை தன்னை நாடி வரும் பக்தர்களின் துன்பத்தை தனதாக்கிக் கொண்டு பக்தர்களுக்கு கெங்கையம்மன் அருள் பாலித்தாள். மாலை 4 மணிக்கு மா விளக்கு பூஜை நடந்தது. இரவு 8 மணிக்கு தாய் வீட்டுக்கு விடை கொடுத்து கெங்கையம்மன் புகுந்த வீட்டுக்கு புறப்பட்டு சென்றாள். கவுண்டன்ய மகாநதி, ஆழ்வார் முருகப்ப முதலி தெரு வழியாக சென்று சுண்ணாம்பு பேட்டை சலவை படித்துறையில் சிரசு ஊர்வலம் முடிந்தது. இதையொட்டி, இரவு 8 மணிக்கு வாண வேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. விழாவையொட்டி வேலூர் மாவட்டத்தில் நேற்று அரசு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 350 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. எஸ்.பி., கயல்விழி தலைமையில், 850 போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டது. மூன்று இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டது. திருடர்கள் விவரம் அடங்கிய டிஜிடல் பேனர்கள் 10 இடத்தில் வைக்கப்பட்டிருந்தது.