திருப்பரங்குன்றம் மலை படிக்கட்டு கல்வெட்டை பாதுகாக்க வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29டிச 2025 10:12
திருப்பரங்குன்றம்: ‘‘திருப்பரங்குன்றம் மலை மீது செல்லும் பாதையில் பழநி ஆண்டவர் கோயில் அருகிலுள்ள கல்வெட்டுக்களை பாதுகாக்க வேண்டும்,’’ என, அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச்செயலர் ராமலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
ராமலிங்கம் கூறியதாவது: மலைமீது செல்லும் படிக்கட்டுகளின் அடிவார பகுதியின் இடதுபுறம் பழநி ஆண்டவர் கோயில் உள்ளது. இதன் கீழ்ப்புறம் தமிழிலும், வலதுபுறம் ஆங்கிலத்திலும் கல்வெட்டுகள் உள்ளன. ஆங்கில கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள் கல்வெட்டு சேதம் அடைந்துள்ளது. தமிழ் கல்வெட்டில் ஸ்ரீ முருகன் மலைப்படி என்ற தலைப்பில் சென்னை சட்டசபை மெம்பர் மற்றும் திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து போர்டு சேர்மன் எஸ்.சின்ன கருப்பத் என்ற எழுத்துக்கள் மட்டும் தெளிவாக தெரிகிறது. மற்ற எழுத்துக்கள், சில ஆண்டுகளுக்கு முன்பு ரோடு சீரமைப்பு நடந்தபோது எழுத்துக்கள் மறைக்கப்பட்டு விட்டன. திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த சின்ன கருப்பத்தேவர் 1957ல் காங்., எம்.எல்.ஏ., வாக இருந்தார். அவர் காலத்தில் அவரது நிதியில் திருப்பரங்குன்றம் மலை மேல் செல்லும் படிக்கட்டுகளை சீரமைத்து கொடுத்தார். அதற்கான கல்வெட்டாக இருக்க வேண்டும் என அப்பகுதியினர் கூறியுள்ளனர். இக்கல்வெட்டை சீரமைத்து, ஆங்கில கல்வெட்டில் உள்ள எழுத்துக்களை முழுமையாக வெளிக் கொணர்ந்தும் பொதுமக்கள் பார்வையில் படும்படி அமைக்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலை முருகன் மலைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ள பல்வேறு ஆதாரங்களில் இக்கல்வெட்டும் ஒன்று. ஓராண்டுக்கு முன்பு கல்வெட்டுகளை சீரமைத்து கொடுக்க சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகத்திடம் மனு அளித்தேன். மனுவைப்பெற்ற துணை கமிஷனர் சூரிய நாராயணன், கும்பாபிஷேகப் பணிகள் நடைபெறும் போது சீரமைக்கப்படும் என்றார். ஆனால் இன்று வரை அதற்கான பணி எதுவும் நடக்கவில்லை. உடனே சீரமைக்க நடவடிக்கை தேவை. இவ்வாறு கூறினார்.