திருப்பரங்குன்றம்: மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, வெளி மாவட்ட பக்தர்கள், கோவில் முன் பஜனை பாடி கோஷங்கள் எழுப்பினர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் சார்பில், மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் மண்டபம் அருகில் உள்ள மண்டபத்தில், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, பல ஆண்டுகளாக ஹிந்து அமை ப்பினர், முருக பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தாண்டு, ஹிந்து தமிழர் கட்சித்தலைவர் ராம ரவிக்குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார். விசாரணைக்கு பின், தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், தீபத்துாணில் தீபம் ஏற்றப்படவில்லை. உச்சிப்பிள்ளையார் மண்டபம் அருகே உள்ள மண்டபத்தில் தான், இந்தாண்டு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இந்நிலையில், நேற்று, கோவை, ஈரோடு, பொள்ளாச்சி உள்ளிட்ட வெளி மாவட்ட பக்தர்கள் மாலை அணிந்து திருப்பரங் குன்றம் வந்தனர். அவர்கள் சுவாமி தரிசனம் முடித்து, கோவில் வாசல் முன் மேளதாளத்துடன் பஜனை பாடி ஆடினர். பின், ‘மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் முருகனுக்கு தீபம் ஏற்ற வேண்டும்’ என கோஷங்களை எழுப்பினர்.