பதிவு செய்த நாள்
18
ஜூலை
2020
05:07
ஈரோடு: கொரோனா ஊரடங்கால், அம்மன் கோவில்கள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆடி முதல் வெள்ளியான நேற்று, வாசல்களில் நின்று, பக்தர்கள் கும்பிட்டு சென்றனர்.
ஆடி மாதம் என்றாலே, அம்மனுக்கு உகந்த மாதம். அனைத்து அம்மன் கோவில்களிலும் வழிபாடு நடக்கும். இதனால் நகரம், கிராமம் வித்தியாசமின்றி களை கட்டும். நடப்பாண்டு கொரோனா ஊரடங்கால், கோவில்கள் மூடப்பட்டுள்ளதால், அதற்கான வாய்ப்பு பறிபோனது. ஆடி முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, ஈரோடு, பெரியமாரியம்மன், சின்ன மரியம்மன், கருங்கல்பாளையம் மாரியம்மன், வலசு மாரியம்மன், சத்திரம்மாரியம்மன், கொங்கலம்மன் கோவில், கோட்டை பத்ர காளியம்மன், கள்ளுக்கடை மேடு காளியம்மன் உள்ளிட்ட, மாநகரில் அனைத்து அம்மன் கோவில்களிலும், பக்தர்கள் யாருமின்றி சிறப்பு பூஜை நடந்தது. கோவில்கள் அடைக்கப்பட்டிருந்தாலும், குடும்பத்துடன் வந்த பல பக்தர்கள், வாசலில் நின்று மனமுருகி கும்பிட்டு சென்றனர். சிலர் விளக்கேற்றி வழிபட்டனர். * ஆடி முதல் வெள்ளியை ஒட்டி, அந்தியூர் மாரியம்மன், மஞ்சள் காப்பு அலங்காரத்தில், நேற்று அருள் பாலித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கோவில் மூடப்பட்டிருந்ததால், வாசலில் பக்தர்கள் நின்று வழிபட்டு சென்றனர்.