பதிவு செய்த நாள்
18
ஜூலை
2020
05:07
நாமக்கல்: ஆடி வெள்ளியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் அம்மன் கோவில்கள் முன், பக்தர்கள் வழிபாடு நடத்தினர். தமிழ் மாதங்களில் வரும் ஆடி மாதத்தில் மாரியம்மன், காளியம்மன் கோவில்களில் திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். பெண்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க ஆடி மாதத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். பால் குடம் எடுத்தல், குத்துவிளக்கு பூஜை, கூழ் ஊற்றுதல், அக்னி பிரவேசித்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளால் விழாக்கோலமாக காணப்படும். தற்போது, ஊரடங்கால் பிரதான கோவில்கள் திறக்கப்படாததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, நேற்று, பெண்கள் அதிகாலையே வீடுகளில் அம்மனை வழிபட்டனர். விரதம் மேற்கொள்ளும் பல பக்தர்கள், நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற பலப்பட்டறை மாரியம்மன் கோவிலின் முன் விளக்கு, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.