திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோவில் பொற்றாமரைக் குளத்தை சீரமைத்து தூர்வார வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோவில் மிகவும் பழமையானது. ஞானசம்பந்தர் உள்ளிட்ட மகான்கள் வருகை புரிந்த தலம். தென்பெண்ணை ஆற்றின் வடகரையில், பாறையின் மீது மிக நேர்த்தியாகவும், அழகாகவும் அமைந்துள்ளது. இத்தலத்தில் இயற்கையாகவே அமையப்பெற்ற பொற்றாமரைக் குளம் உள்ளது. எந்த கால சூழ்நிலையிலும் வற்றாத குளம். ஒரு காலத்தில் இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்தது. குளத்தை சுற்றி இருக்கும் பாறைப் பகுதிகள் அனைத்தும் கோவிலுக்கு சொந்தமான இடம். என்றாலும், தனிநபர்கள் ஆக்கிரமித்து வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் இடம் பாறைப் பகுதி என்பதால் வீடுகளில் கழிவுநீர் தொட்டி அமைக்க முடியாத சூழல். இதன் காரணமாக குளத்தை சுற்றி இருக்கும் பாறை மீது திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவலம் அரங்கேறுகிறது.
பேரூராட்சி நிர்வாகம் இதனை எவ்வளவு கட்டுப்படுத்தியும் முடியவில்லை. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உந்துதல் இல்லாத இப்பகுதி மக்கள், தொடர்ந்து அசிங்கம் செய்வதால் இயற்கை எழில் சூழ்ந்த புண்ணிய பொற்றாமரைக்குளம் இன்று பார்ப்பதற்கே அருவருப்பாக காட்சியளிக்கிறது. இந்த அவலத்தைப் போக்க பேரூராட்சி நிர்வாகம் இப்பகுதியில் இரண்டு இடங்களில் பொது கழிப்பறைகளை கட்டிக் கொடுத்துள்ளது. இதனையும் முறையாக பராமரிக்கவில்லை. தொடர்ந்து திறந்த வெளியிலேயே அசிங்கம் செய்து வருகின்றனர். இக்குறையை போக்க பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப் படாமலிருகாகும் குளத்தை தூர்வார வேண்டும். அத்துடன் குளத்தை சுற்றி தடுப்புகளை ஏற்படுத்தி குளத்தை அசிங்கம் செய்வதை தடுக்க வேண்டும். அப்பகுதியில் பேரூராட்சி சார்பில் கட்டப்பட்டிருக்கும் பொது கழிப்பறையை சீரமைத்து முறையாக பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும். இதனை பேரூராட்சி நிர்வாகம், பொதுநல ஆர்வலர்கள் இணைந்து செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் பிரசித்தி பெற்ற பழமையான இக்கோவிலின் அழகும், பாரம்பரியமும் பாதுகாக்கப்படும் என எதிர்பார்க்கின்றனர் பக்தர்கள்.