பதிவு செய்த நாள்
21
ஜூலை
2020
10:07
ராமேஸ்வரம் : ஆடி அமாவாசையான நேற்று, பக்தர்கள் நீராட அனுமதிக்கப்படாததால், ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் வெறிச்சோடியது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் கோவில், அக்னி தீர்த்த கடலில், ஆடி, தை அமாவாசை நாட்களில், ஏராளமான பக்தர்கள் திதி, தர்ப்பணம் செய்து புனித நீராடுவர்.கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், ஆடி அமாவாசையான நேற்று போலீசார், நகராட்சி ஊழியர்கள், பக்தர்களை நீராட விடாமல் தடுத்தனர். பாம்பன் பாலம் நுழைவில், வாகனங்களை சோதனை செய்து, திருப்பி அனுப்பினர்.இதேபோல், திருப்புல்லாணி சேதுக்கரை, மாரியூர், வாலிநோக்கம், மூக்கையூர் உள்ளிட்ட கடற்கரைப் பகுதியிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காவிரி கரையோரங்களில், ஆடி அமாவாசை மிகவும் பிரசித்தி பெற்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தில், காவிரி ஆற்றின் கரைகளில் உள்ள திருவையாறு புஷ்ப படித்துறை, பகவத் படித்துறை, கும்பகோணம் மகாமக குளம், வெண்ணாறு, வடவாறு ஆற்றங்கரைகளிலும் தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சிக்கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.இதேபோல, சேலம் மாவட்டம், மேட்டூர் துவங்கி, காவிரி பாயும் பகுதிகள் அனைத்திலும், பக்தர்கள் கூட, தடை விதிக்கப்பட்டது.மேலும், தாமிரபரணி நதி பாயும், திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், டவுன் குறுக்குத்துறை, துாத்துக்குடி மாவட்டம், வல்லநாடு, அகரம் பகுதிகளிலும் பக்தர்கள் கூட, தடை விதிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள், வீடுகளிலேயே தர்ப்பணம் கொடுத்து, மூதாதையர்களை வழிபட்டனர்.