திருமலை: திருமலை திருப்பதி கோவிலில் அர்ச்சகர்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து திருப்பதி கோயில் கொரோனா பாதித்த கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு 14 நாட்களுக்கு கோயிலை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பல கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு கோவில் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டன.
கொரோனா பாதிப்பு காரணமாக ஆந்திரமாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருமலை திருப்பதி கோவில் கடந்த ஜூன் மாதம் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு கோவில் அர்ச்சகர்கள் உள்பட 50 பேரில் 15-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் 25 பேரின் பரிசோதனை முடிவுகள் வர உள்ளன. தொற்று தீவிரமானதையடுத்து கோவில் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பொது தரிசனத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து திருப்பதி கோவில் பகுதி கொரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டு ஆக. 5-ம் தேதி வரை 14 நாட்கள் கோயிலை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டதால் அத்தியாவசிய பொருட்கள் தவிர வாகன போக்குவரத்து உள்ளிட்ட மற்றவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.