சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையும் நாள் அமாவாசை. இந்நாளில் பிதுர்களுக்கு பசியும், தாகமும் அதிகமாக ஏற்படும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனடிப்படையில் அமாவாசைக்கு ‘பிதுர் திதி’ என்றும் பெயருண்டு. இந்நாளில் நம் வீட்டு வாசலில் வந்து தங்களுக்கு வழங்க வேண்டிய எள்ளும், தண்ணீரும் பெற முன்னோர்கள் காத்திருப்பதாகவும், ஆனால், சிரார்த்தமோ, தர்ப்பணமோ தரப்படவில்லை என்றால் ஏமாற்றம் அடைவதால் முன்னோர் சாபமிடுவதாகவும் சாஸ்திரம் கூறுகிறது. இதை விளக்கம் ஸ்லோகமாக, ‘‘அமாவாஸ்யா திநே ப்ராப்தே க்ருஹ த்வாரம் ஸமாஸ்ரிதா:! ஸராத்தாபாவே ஸ்வபவநம் ஸாபம் தத்வா வ்ரஜந்தி தே!! என நிர்ணய ஸிந்து குறிப்பிடுகிறது. ஆடிஅமாவாசையன்று ‘‘பூமியில் எங்களின் மகன் பக்தியுடன் எள்ளுடன் தண்ணீரைச் சேர்த்து தர்ப்பணம் செய்யப் போகிறான்’’ என எதிர்பார்த்து முன்னோர்கள் காத்திருப்பதாக விஷ்ணு புராணம் கூறுகிறது.