பதிவு செய்த நாள்
28
ஜூலை
2020
02:07
கோவில்களில் தட்டு காணிக்கையை மட்டும் நம்பி, குடும்பம் நடத்தும் கோவில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்களின் குடும்பங்கள், பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதால், அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்ற, கோரிக்கை வலுத்துள்ளது.
தமிழகத்தில், 38 ஆயிரத்து, 652 கோவில்கள், மடங்கள், அறக்கட்டளைகள் உள்ளன. இதில், ஏராளமான அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகள் பணிபுரிந்து வருகின்றனர். நிரந்தர பணியாளர்களுக்கு, கணிசமான சம்பளம் கிடைக்கும். தற்காலிக பணியில் உள்ளோருக்கு, அதிகபட்சமாக, 1,500 ரூபாய் மாத சம்பளமாக வழங்கப்படுகிறது.இவர்களின் வாழ்வாதாரம், தட்டு காணிக்கை தான். அதன் வாயிலாகவே, அவர்கள் குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், மார்ச், 2௫ முதல் தமிழகத்தில் உள்ள கோவில்களில், பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
இதில், தட்டு காணிக்கையை நம்பி வாழ்க்கை நடத்தும், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் உள்ளிட்ட தற்காலிக கோவில் பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.ஊரடங்கு தளர்வு காரணமாக, சில மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களில் சிறிய கோவில்கள் திறக்கப்பட்டாலும், கட்டுப்பாடு காரணமாக, பக்தர்கள் வருகை மிகவும் குறைவாகவே உள்ளது.வறுமை பல மாதங்களாக தொடர்வதால், பலர் தங்கள் குடும்பத்தாரின் நகைகளை அடமானம் வைத்து வாழ்க்கை நடத்தும், அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இது குறித்து, தமிழக அரசு தனி கவனம் செலுத்தி, பாதிக்கப்பட்டுள்ள தற்காலிக கோவில் ஊழியர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற, கோரிக்கை வலுத்து உள்ளது.