வரலட்சுமி நோன்பு: வீடுகளில் பெண்கள் வழிபாடு
பதிவு செய்த நாள்
01
ஆக 2020 10:08
சென்னை,வரலட்சுமி நோன்பான நேற்று, பெண்கள் வீடுகளிலேயே, வழிபாடு நடத்தினர். பெசன்ட் நகர் அஷ்ட லட்சுமி உள்ளிட்ட கோவில்களில், பக்தர்கள் இல்லாமல் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.வரலட்சுமி நோன்பு அல்லது மகாலட்சுமி விரதம் என்பது, செல்வங்களுக்கு அதிபதியான, மஹா லட்சுமியின் அருள் வேண்டி செய்யப்படும், முக்கிய விரதம் ஆகும். ஒவ்வோர் ஆண்டும், ஆடி அல்லது ஆவணி மாத, பவுர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை, வரலட்சுமி பூஜை நோன்பு நாளாகும். சுமங்கலி பெண்கள், தங்கள் மாங்கல்யம் நிலைக்கவும், குடும்பங்கள் செல்வ செழிப்போடு இருக்கவும், கன்னிப் பெண்கள், நல்ல கணவர் அமைய வேண்டியும், இந்த விரதத்தை மேற்கொள்வது வழக்கம்.ஊரடங்கு காரண மாக, பெண்கள் தங்களின் வீடுகளில், நோன்பு இருந்து வழிபட்டனர்.பெசன்ட்நகர், அஷ்டலட்சுமி கோவிலில், வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, பக்தர்கள் இன்றி, நேற்று காலை, 6:30 மணிக்கு, விஸ்வரூப தரிசனம் நடந்தது. காலை, 9:30 மணிக்கு, குபேர ஹோமம் நடத்தப்பட்டது.மதியம், 12:30 மணிக்கு, மஹா பூர்ணாஹுதியும், மாலை, 4:30 மணிக்கு, சிறப்பு அலங்காரமும் நடந்தது. இரவு, 8:30 மணிக்கு, சாற்று முறை, அதை தொடர்ந்து, சயன பூஜையுடன் விழா நிறைவுற்றது.காளிகாம்பாள் உள்ளிட்ட கோவில்களில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடத்தப்பட்டன.
|