பகவானுடைய திருநாமங்களில் பிடித்தமான ஏதாவது ஒரு பெயரை சொல்லிக் கொள்வதை நாமஜபம் என்று குறிப்பிடுவர். நாவில் தழும்பு ஏற்படும் அளவுக்கு இறைவனின் திருநாமங்களை விடாமல் ஜெபிப்பவர்கள் ஒரு காலத்தில் இருந்தனர். காலையில் தூக்கம் கலைந்து எழுந்தவுடன் சொல்வதற்குரிய நாமம் ஹரி. இதனை குறைந்தபட்சம் ஏழு முறையாவது சொல்ல வேண்டும். மனசுக்குள் சொன்னால் பலன் நமக்கு மட்டுமே கிடைக்கும். வீட்டில் உள்ளவர்க்கும் கேட்கும்விதத்தில் சொன்னால் அவர்களுக்கும், அருகில் உள்ளவர்களுக்கும் நன்மை உண்டாகும். வெளியில் கிளம்பிச் சொல்லும்போது கேசவா என்று சொல்ல வேண்டும். இதனால், செய்யும் செயல்கள் தடையின்றி நடக்கும். திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி மீது நம்மாழ்வார் பாடிய பாசுரத்தில், கெடும் இடராயவெல்லாம் கேசவா என்ன öன்று குறிப்பிட்டுள்ளார். ஆண்டாளும் திருப்பாவையில், கேசவனைப் பாடவும் நீ கேட்டோ கிடத்தியோ? என்று தோழியைக் கேட்கிறாள். சாப்பிடும் போது கோவிந்தா என்று சொல்லிவிட்டு உண்ணவேண்டும். இதனால், என்றும் சுவையான சாப்பாடு கிடைக்கும்.