ஹாசன்: பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில், 14 நாட்களுக்குப் பின், நேற்று நடை அடைக்கப்பட்டது. இந்தாண்டு, 25 லட்சம் பக்தர்கள் தரிசித்துள்ளனர்.
ஹாசன் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில், பக்தர்கள் தரிசனத்துக்காக, ஆண்டுக்கு ஒருமுறை சில நாட்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டு கடந்த 9ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது.
அம்மனை தரிசிக்க, மாநிலம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் வந்தனர். தினமும் லட்சக்கணக்கான மக்கள் வழிபாடு செய்தனர். அரசியல் தலைவர்கள் உட்பட சினிமா பிரபலங்களும் தரிசித்தனர். 14 நாட்களுக்குப் பின் ஹாசனாம்பா கோவில் கதவுகள் நேற்று மதியம் மூடப்பட்டன. கோவில் சாவி, மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட பொறுப்பு வகிக்கும் வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா அளித்த பேட்டி: கடந்தாண்டு 17 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதன் மூலம் 12 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. நடப்பாண்டு 26 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ததன் மூலம், 21.8 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. சாதாரண மக்களும் எந்த இடையூறும் இன்றி தரிசித்தனர். இது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. மாநிலம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்துள்ளனர். எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், மாவட்ட நிர்வாகிகள் ஒத்துழைப்பால், ஹாசனாம்பா தரிசனம் சிறப்பாக முடிந்தது. இதற்காக அதிகாரிகள் அனைவரும் கடுமையாக உழைத்தனர். அனைவருக்கும் நன்றி. இனி, அடுத்தாண்டு அக்., 29 முதல் நவ., 11ம் தேதி வரை ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.