பதிவு செய்த நாள்
16
மே
2012
11:05
மானசரோவர் புனித யாத்திரைக்குச் செல்ல இந்திய வெளியுறவுத் துறையால், தெரிவு செய்யப்படும் தமிழகத்தைச் சேர்ந்த, 250 இந்துக்களுக்கும், முக்திநாத் புனித யாத்திரை மேற்கொள்ளும், 250 இந்துக்களுக்கும் என, மொத்தம் 500 பேருக்கு, தமிழக அரசு சார்பில் மானியம் வழங்கப்படும் என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோர் புனித யாத்திரை செல்ல அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. அதே போல், இந்துக்களுக்கும் மானியம் வழங்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கைகள் வந்தன. இதனை ஏற்று, இந்துக்களுக்கும் மானியம் வழங்கும் புது திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டசபையில், நேற்று இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: வாக்குறுதி: கிறிஸ்தவர்கள் ஜெருசலம் புனித யாத்திரை மேற்கொள்ளவும், இந்துக்கள் சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள, முக்திநாத் புனித யாத்திரை மேற்கொள்ளவும், அரசு சார்பில் உதவி செய்யப்படும் என, 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, நான் வாக்குறுதி அளித்திருந்தேன். வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமான, ஜெருசலம் சென்று வருவதற்கு, அரசு நிதி உதவி அளிக்கும் என்றும், இந்தத் திட்டம் அனைத்து கிறிஸ்தவப் பிரிவினரையும் உள்ளடக்கியதாக அமையும். முதற்கட்டமாக, 500 கிறிஸ்தவர்கள் ஜெருசலம் சென்று வர ஏற்பாடு செய்யப்படும் என்றும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் அறிவித்தேன். இதையடுத்து, இதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டன.
விருப்பம்: இந்துக்களைப் பொறுத்தவரை, ஆன்மிகம் தேடும் ஒவ்வொருவருக்கும், ஒரே ஒரு முறையாவது, சீனாவில் உள்ள மானசரோவர் சென்று பார்க்க வேண்டும் என்பதும், நேபாள நாட்டில், சாளக்கிராம் மலையில் உள்ள திவ்ய தேசங்களில் ஒன்றான முக்திநாத் சென்று தரிசிக்க வேண்டும் என்பதும், அவர்களின் விருப்பமாக உள்ளது. எனவே, இதை கருத்தில் கொண்டு, சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாள நாட்டில் உள்ள முக்திநாத் ஆகிய இடங்களுக்கு செல்ல விரும்பும் இந்துக்களின் பயணச் செலவிற்கு மானியம் வழங்கப்படும்.
500 பேருக்கு: இந்த அரசு மானியம், மானசரோவர் புனித யாத்திரைக்குச் செல்ல இந்திய வெளியுறவுத் துறையால், தெரிவு செய்யப்படும். தமிழகத்தைச் சேர்ந்த, 250 இந்துக்களுக்கும், முக்திநாத் புனித யாத்திரை மேற்கொள்ளும், 250 இந்துக்களுக்கும் என, மொத்தம் 500 பேருக்கு வழங்கப்படும். மானசரோவர் புனித பயணத்திற்கு, ஒரு நபருக்கு ஆகும் மொத்த செலவான ஒரு லட்சம் ரூபாயில் 40 ஆயிரம் ரூபாயும், முக்திநாத் புனிதப் பயணத்திற்கு ஒரு நபருக்கு ஆகும் செலவான, 25 ஆயிரம் ரூபாயில் 10 ஆயிரம் ரூபாயும் மானியமாக வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.