சிலருக்கு கோபம் வந்து விட்டால் என்ன செய்கிறோம் என்று தெரிவதில்லை. இப்படித்தான் டேனியல் என்பவர் மகன் மீதுள்ள கோபத்தால் கடுமையான வார்த்தைகளை வீசினார். காரணம் அவரது மகன் டேனியலுக்கு பிடிக்காத வீட்டு பெண்ணைத் திருமணத்தை செய்யும் முடிவுக்கு வந்தான். பிள்ளைகளை புறக்கணிக்கும் பெற்றோர் இருக்கிறார்கள். அதே போல பெற்றோரை புறக்கணிக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள். ‘இறந்த பின் முகத்தில் விழிக்கக் கூட உனக்கு உரிமையில்லை’ என சபதம் செய்பவரைக் கூட நீங்கள் பார்த்திருக்கலாம். குடும்பத்தில் மனக்கசப்பு, உறவினரிடம் வெறுப்பு, பிள்ளைகளிடம் தீராக்கோபம் என மனிதர்கள் கோபத்தால் தன்னையும், மற்றவர்களையும் வேதனைப்படுத்துகின்றனர். ஆனால் குற்றத்தை மன்னிக்க பழக வேண்டும் என்கிறார் ஆண்டவர். ‘குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை’’ என்னும்படி நடக்க வேண்டும். இதனால் மனச்சுமை குறையும். வெறுப்பு மறையும். ஆண்டவரின் கருணை கிடைக்கும். மனதில் அன்பு இருக்குமானால் பிறரது தவறுகள் பெரிதாகத் தோன்றாது. ஒருபோதும் காழ்ப்புணர்ச்சிக்கு இடம் தராதீர்கள். இப்படி சமுதாயம் மாறினால் எங்கும் அமைதி நிலவும். அன்பு திரளான பாவங்களை மூடும் அல்லவா!