கிராமத்து விவசாயி பாடுபட்டு மகனை படிக்க வைத்தார். அவனும் நன்கு படித்து அரசு அதிகாரியாக நகரத்தில் பணிபுரிந்தான். சில மாதம் கழிந்தது. தோட்டத்தில் விளைந்த பழங்கள், வீட்டில் செய்த பலகாரங்களுடன் மகனைப் பார்க்க புறப்பட்டார் விவசாயி. அலுவலகத்தில் உயர்அதிகாரிகளுடன் மகன் உரையாடுவதைக் கண்டார். விவசாயியின் மனம் குளிர்ந்தது. அவரைக் கண்ட கடைநிலை ஊழியர், ‘‘ உங்களுக்கு வேறு வேலையில்லையா, எப்போதும் பிரச்னை என்று வந்து விடுகிறீர்கள். இன்னைக்கு மீட்டிங் நடப்பதால் யாரும் மனு கொடுக்க முடியாது. இடத்தை காலி பண்ணுங்கள்’’ என அலட்சியப்படுத்தினார். இதற்கு காரணம் விவசாயியின் ஏழ்மைக் கோலம் தான்! இதை கவனித்த அதிகாரி, ‘‘ அவர் என் அப்பா, இப்படியா அவமானப்படுத்துவது. அவரு வயதுக்கு கூடவா...மரியாதை இல்லை. பதவியில் இருக்கிறோம் என்பதற்காக மற்றவரை ஏளனப்படுத்தக் கூடாது. நமக்கு கொடுத்திருக்கும் பதவியை தவறாக பயன்படுத்தக்கூடாது. பகைவரிடமும் அன்பு காட்ட வேண்டும் என்பதே ஆண்டவரின் கட்டளை’’ என்றார். தவறை உணர்ந்த ஊழியர் மன்னிப்பு கேட்டார். ஏழ்மையிலிருந்து மேல்நிலைக்கு வந்ததும் சிலர் கடந்த காலத்தை மறந்து விடுவர். அந்தஸ்து கருதி ஏழ்மையில் வாடும் இருக்கும் நண்பர், உறவினர்களை புறக்கணிப்பர். இதை தவிர்த்து அன்பால் பிறரை ஆதரிக்க வேண்டும்.