புதுச்சேரி:முதலியார்பேட்டை வன்னியப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில், தேர் உற்சவம் நேற்று நடந்தது.முதலியார்பேட்டை வன்னியப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா, கடந்த 8ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, 7ம் தேதி சம்வத்ஸராபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விழா நாட்களில் காலையில் ஹோமம், சுவாமிக்குத் திருமஞ்சனம், இரவு வீதியுலா நடந்து வந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேர்த் திருவிழா நேற்று நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி மாட வீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, கோபுர வாயியில் தீர்த்தவாரி நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் தனி அதிகாரி சீனுவாசன் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.