பதிவு செய்த நாள்
17
மே
2012
11:05
ராமநாதபுரம் : ஞானத்திற்கு சமமான, புனிதமான பொருள் வேறொன்றும் இல்லை, என, ராமநாதபுரத்தில், சிருங்கேரி பாரதீ தீர்த்த சுவாமிகள் பேசினார். அவரது அருளுரை: குருநாதர் அனுகிரகத்துக்கு முன் எதுவும் பெரிதல்ல. வாழ்வில் கஷ்டம், சுகங்கள் வந்து போகும். சுகமான நாட்கள் சீக்கிரம் கழிந்து விடும். கஷ்டம் வந்தால், நாட்கள் கழிய, காலதாமதம் ஏற்படுவது போல் தோன்றும். கோயிலுக்கு சென்று சுவாமியை தரிசித்தால் நிவர்த்தி கிடைக்கும். கடவுளும், குருவும் முக்கியம். இருவரையும் ஒன்றாக தான் கருதவேண்டும். பகவான், நமது அனைத்து கஷ்டத்தில் இருந்தும் சுகத்தை தருவார். மனிதனுக்கு ஞானம் மிக முக்கியம். இதற்கு சமமான, புனிதமான வேறு பொருட்கள் இல்லை. ஞானத்தை உபதேசிப்பது குரு மட்டும் தான். குருவுக்கு சேவை செய்து, ஞானத்தை அடைய வேண்டும். ஞானத்தை தரும் குருவும், கஷ்டத்தை போக்கும் கடவுளும் நமக்கு முக்கியம். எந்த விஷயத்திலும், ஆசை இல்லாமல் இருப்பவர் தான் குரு. சிருங்கேரிக்கும், ராமேஸ்வரத்திற்கும் அந்த கால கட்டத்தில் இருந்தே, சம்பந்தம் உண்டு. நமது ஷேத்திரம் ராமேஸ்வரம். ராமேஸ்வரத்தில் பூஜை செய்யக் கூடிய பாக்கியம் உள்ளது. அனைவரும் வாழ்வில் சுகமாக, பவித்தரமாக வாழவேண்டும், என்றார். முன்னதாக சுவாமிக்கு, ராமநாதபுரம் தேவஸ்தானம் சார்பில் பரம்பரை அறங்காவலர் ராஜேஸ்வரி நாச்சியார் தலைமையில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
நாளை ராமேஸ்வரத்திற்கு யாத்திரை: கடவுள் தந்த பகுத்தறிவைப் பயன்படுத்துங்கள், என்கிறார் சிருங்கேரி சுவாமிகள். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திற்கும் ஒரு குணம் உண்டு. அது என்னவென்றால், நாள் செல்ல செல்ல எதுவும் ஆற்றல் குறைந்து கொண்டே போகும். விதிவிலக்காக, ஆசை மட்டும் வளர்ந்து கொண்டே செல்லும். ""மனிதனுக்கு வயதாகி விட்டது. பல் எல்லாம் கீழே விழுந்துவிட்டது. தலை நரைத்துப் போனது. கையில் ஊன்றுகோல். இவ்வளவு ஏற்பட்ட பிறகும் மனதில் ஆசை எழுகிறது. அதுவும் நாளுக்கு நாள் அதிகமாகிறது, என்று ஆசையின் தன்மையைக் குறிப்பிடுகிறார் ஆதிசங்கரர். கையில் ஒரு ரூபாய் இருப்பவன் பத்து ரூபாய்க்கு ஆசைப்படுகிறான். பத்து ரூபாய் கிடைத்து விட்டால் நூறு ரூபாய் தேவைப்படுகிறது. நூறு, ஆயிரம், லட்சம்,கோடி என்று பணம் வந்தாலும் மனம் திருப்தி அடைவதில்லை. நாட்டுக்கே ராஜாவாக வேண்டும் என்ற எண்ணம் உண்டாகிறது. ஆசைக்கு எல்லை தான் ஏது? மனிதனுக்கு இருக்கும் பெரிய எதிரி ஆசை தான். மனிதப்பிறவியின் லட்சியம் மோட்சத்தை அடைவது தான். கடவுள் நமக்கு பகுத்தறிவைக் கொடுத்திருக்கிறார். எது நல்லது எது கெட்டது என்று அதன்மூலம் பகுத்தறிய வேண்டும். பகவான் நாமத்தை எப்போதும் பக்தியுடன் ஜெபியுங்கள். அவரின் பெருமைகளைப் பாடுங்கள். இதுவே நம் பிறவிப்பயனாகும். இத்தகைய அருளுரையைச் சொன்ன சிருங்கேரி பாரதீ தீர்த்த சுவாமி நாளை(மே18) காலை 10-12 வரை ராமேஸ்வரம் சிருங்கேரி சங்கரமடத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார். போன்: 94435 02607.