பதிவு செய்த நாள்
20
ஆக
2020
11:08
கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி பகுதியில் விநாயகர் சதுர்த்தியன்று, அரசு விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி.எஸ்.பி., எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துறை சார்பில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப் இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், மணிகண்டன், பா.ஜ., நகர தலைவர் சர்தார்சிங், இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா, செயற்குழு உறுப்பினர் அருண், மாவட்ட செயலாளர் சக்திவேல், நகர செயலாளர்கள் வீரமணி, ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு தலைமை தாங்கி டி.எஸ்.பி., ராமநாதன் பேசுகையில், கொரோனா தொற்று காரணமாக மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது மற்றும் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறிய வகையிலான விநாயகர் சிலையினை வீட்டில் வைத்து வழிபட வேண்டும்.கள்ளக்குறிச்சி பகுதியில் சிறு சச்சரவுகளுக்கும் இடம் அளிக்காத வகையில் நடந்து கொள்ள வேண்டும். வாட்ஸ் ஆப், பேஸ் புக் போன்ற சமூக வலைதளங்களில் பொதுமக்களை பீதியடையும் வகையிலான பதிவுகளை பதிவு செய்தால் காவல் துறை சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.