பதிவு செய்த நாள்
20
ஆக
2020
11:08
கடலுார் : விநாயகர் சதுர்த்தி விழா விமர்சியாக கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கடலுார் மாவட்டம் முழுவதும் போலீசார், வருவாய்த் துறையினர் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா வரும் 22ம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கொரோனா நோய் பரவலை தடுக்க பொது விழாக்களை தவிர்க்கவும், பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.கடலுார் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை வீடுகளில் எளிமையாக கொண்டாட அரசு அறிவுறுத்தியுள்ளது. பொது இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்து விழா கொண்டாடுதல், ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்பு நிர்வாகிகளுடன் கலெக்டர் சந்திரசேகர சகாமுரி ஆலோசனை நடத்தினார்.காவல்துறை அதிகாரிகள், சப் கலெக்டர்கள், ஆர்.டி.ஓ.,க்கள் உள்ளாட்சித்துறை, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடவும், தடையை மீறினால் நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள கடலுார், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி போலீஸ் உட்கோட்ட பகுதியில் அரசியல் கட்சியினர் மற்றும் ஆன்மிக அமைப்பினரை அழைத்து,சப் கலெக்டர் மற்றும் டி.எஸ்.பி.,க்கள் அறிவுறுத்தினர்.
கண்காணிப்பு குழுஇந்நிலையில், விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவோம் என, சிலர் முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா சிலைகள் வைத்து கொண்டாடுவதை கண்டறிந்து முன் கூட்டியே தடுக்க, போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் கண்காணிப்பு குழு அமைத்துள்ளனர்.வருவாய்த்துறையினர் போலீசார், கிராம பிரமுகர்கள் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர், ஏற்கனவே விநாயகர் சதுர்த்தி விழாவை பிரமாண்டமாக கொண்டாடிய பகுதிகள் மற்றும் அமைப்புகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அரசின் தடையை மீறும் பட்சத்தில், வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.