கலாசாரத்தில் பாஷை மிக முக்யம். அதை வைத்துத்தானே சமய சம்பந்தமான நூல்கள், அறிவை வளர்த்துக் கொள்ளும் நூல்கள், மனசுக்கு விருப்பமான மற்ற கதை, கவிதை, காவ்யம் எல்லாமே? அப்படியிருக்கப்பட்ட தமிழ் பாஷைக்கு விக்னேச்வரர் ரொம்ப முக்யம். எது ஒன்று எழுத ஆரம்பித்தாலும், கடைக்கு சாமான் லிஸ்ட் எழுதினால் கூட சரி, முதலில் என்ன பண்ணுகிறோம்? பிள்ளையார்சுழி என்று தானே போடுகிறோம். எடுத்துக் கொண்ட கார்யம் சுழித்துப் போகாமல் ரக்ஷித்துக் கொடுப்பதற்காக முதலில் பிள்ளையார்சுழி! பிள்ளையார்சுழி என்ற அர்த்தத்தில், ஸம்ஸ்கிருதம் உள்பட இந்ததேச பாஷைகளில் வேறே எதிலும் இப்படி மங்களாரம்ப ஸிம்பலாக ஒன்று இல்லை. இது நம் தமிழ்மொழியின் பாக்யம். பிள்ளையாருக்கென்று ஏகப்பட்ட கோயில்கள் கட்டி வைத்திருப்பதும் தமிழ்நாட்டில் தான். வேறு எந்த ஸ்வாமிக்கும் இல்லாத அளவுக்கு பிள்ளையாருக்குத் தான் மூலைக்கு மூலைகோயில்! காணபத்யத்துக்கு (விநாயகர் வழிபாட்டிற்கு) மகாராஷ்டிரம் தான் ராஜதானி(தலைநகர்) என்று சொல்வார்கள். ஆனால், கோயில் கணக்குப் பார்த்தால் அது, தமிழ் நாட்டுக்கு ரொம்பவும் பின்தங்கி எங்கேயோ தான் நிற்கும். -காஞ்சிபெரியவர் பெருமிதம்