பிரம்ம தேவனுக்கு புத்தி, சித்தி இரண்டு புத்திரிகள் இருந்தனர். பிரம்ம தேவர் அவர்களை விநாயகருக்கு மணம் முடித்து வைக்க விரும்பினார். உடனே அவர் நாரதரைக் கூப்பிட்டு விஷயத்தைக் கூறி விநாயகரிடம் தூது அனுப்பினார். நாரதரும் விநாயகரிடம் சென்று தன் இயல்பான கலகமூட்டும் வேலையைச் செய்யாமல் ஒழுங்காக வந்த விஷயத்தைக் கூறினார். பிள்ளையாரும் மணமுடிக்க சம்மதித்தார். நாரதர் நேராகச் சென்று விஷயத்தை பிரம்மனிடம் கூறிவிட்டார். பிரம்மனும் முறைப்படி சிவபெருமானையும் பார்வதியையும் பார்த்து விஷயத்தைக் கூறவே அவர்களும் தங்களது சம்மதத்தைத் தெரிவித்து விட்டனர். திருமணத்திற்கு நாளும் குறிக்கப்பட்டு விட்டது. விஸ்வகர்மா (தேவதச்சன்) திருமணத்துக்கு என்று சொர்க்க லோகத்தை விட சிறப்பான ஒரு நகரத்தை நிர்மாணித்தான். திருமணத்தைக் காண அனைத்து லோகங்களிலிருந்தும் கூட்டம் கூடிவிட்டது. அவர்களின் பசியைத் தணிக்க காமதேனு அவர்களுக்கு உணவு அளித்துக் கொண்டே இருந்தது. திருமண நாளும் வந்தது. சித்திக்கு லட்சுமி தேவியும், புத்திக்கு இந்திராணியும் அலங்கரித்து மணமேடைக்கு அழைத்து வந்தனர். நூறாயிரம் கோடி தேவர்கள் மந்திரம் முழங்க சித்தி, புத்தி இருவரின் கழுத்திலும் விநாயகர் மங்கள நாண் பூட்டினார்.