ஒருமுறை விநாயகர் சதுர்த்தியன்று காஞ்சி மகாசுவாமிகள் பக்தர்களிடம் உரையாடினார். ‘‘ எந்த ஒரு விஷயத்தை எழுதினாலும் முதலில் பிள்ளையார்சுழி தானே இடுகிறோம்? ஆரம்பித்த செயல் இடையில் சுழித்துப் போகாமல் (தடைபடாமல்) இருக்க இப்படி தொடங்குகிறோம். நம் பண்பாட்டில் மொழிக்கு முக்கியத்துவம் உண்டு. மொழியால் தானே தேவாரம், திருவாசகம் என இத்தனை பக்தி நுால்கள் தமிழில் தோன்றின? அதிலும் தமிழில் விநாயகருக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. ஆதிகாலத்தில் முத்தமிழை மேருமலையில் விநாயகரே எழுதினார் என்னும் அபூர்வ தகவல் திருப்புகழில் உள்ளது. ‘கைத்தல நிறைகனி’ என்னும் விநாயகர் பாடலில், ‘முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே!’ என்கிறார் அருணகிரிநாதர். மகாபாரதத்தை எழுதும் முன்பே இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் நுால்களை விநாயகர் மேருமலையில் எழுதி வைத்தார். அந்த விநாயகரின் திருவடியைச் சரணடைந்தால் நல்ல வாக்கு உண்டாகும் என்கிறாள் அவ்வைப்பாட்டி. இதனால் தான் குழந்தைகளுக்கு தமிழ்பாடத்தில் அவ்வையாரின் ஆத்திசூடி, மூதுரையை கற்றுக் கொடுக்கிறோம். குழந்தை அழகாக பேசினால் மட்டும் போதுமா? மனதில் நல்ல எண்ணம் உண்டாகி, வாக்கில் வெளிப்பட்டால் தானே நமக்கும், மற்றவருக்கும் பலன் கிடைக்கும். விநாயகரை சரணடைந்தால் நல்ல வாக்கு, நல்ல மனம், லட்சுமி கடாட்சம் உண்டாகும். நோயற்ற வாழ்வு கிடைக்கும். ‘‘வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு’’ பூக்களை பறித்து விநாயகர் திருவடியை பூஜித்தால் போதும். அவரது உடம்பை ‘துப்பார் திருமேனி’ என்கிறாள் பாட்டி. இதற்கு ‘ சிவந்த திருமேனி’ என்பது பொருள். ‘பவளம் போல் மேனி’ என சிவனை திருநாவுக்கரசர் சொல்லியது போல அவரது மூத்தமகன் விநாயகரும் சிவந்த நிறத்துடன் இருக்கிறார். ‘தாயைப் போலப் பிள்ளை’ என்பது தானே பழமொழி என்றால் விநாயகரின் தாய் காமாட்சியும் செக்கச் செவேல் என்று தானே இருக்கிறாள். இப்படி பெருமை மிக்க விநாயகரை வழிபட்டவருக்கு எல்லா மங்கலங்களும் தப்பாமல் கிடைக்கும்’’ என்றார் மகாசுவாமிகள்.