பதிவு செய்த நாள்
18
மே
2012
10:05
திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயில் உட்பட மாநகரின் பல்வேறு சிவன் கோயில்களில் நேற்று மாலை குரு பெயர்ச்சி கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். குருபகவான் நேற்று மாலை 6.18 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பிரவேசித்தார். இதனை முன்னிட்டு நெல்லையப்பர் கோயில் தட்சிணாமூர்த்தி சன்னதிகளில் நேற்று மாலை சிறப்பு ஹோமங்கள், பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. மாநகரின் பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை, மஞ்சள் நிற வஸ்திரம் சமர்ப்பித்ததோடு, பரிகார பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.
பாளை., சிவன் கோயில்: பாளை., சிவன்(திரிபுராந்தீஸ்வரர்) கோயிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு தட்சிணாமூர்த்திக்கு நேற்று மாலை சிறப்பு ஹோமம், பூஜைகள் நடந்தது. இதனைத் தொடர்ந்து தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. பாளை., மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தட்சிணாமூர்த்திக்கு பரிகார பூஜை நடத்தி வழிபட்டனர்.
காசி விஸ்வநாதர் கோயில்: கொக்கிரகுளம் காசி விஸ்வநாதர், விசாலாட்சி கோயிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு தட்சிணாமூர்த்திக்கு நேற்று மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், மகா சங்கல்பம், குருசாந்தி பரிகார ஹோமம், தட்சிணாமூர்த்தி மூல மந்திரம், நவக்கிரஹ சாந்தி, பரிஹார ஹோமம் மற்றும் தட்சிணாமூர்த்தி காயத்ரி ஹோமம், சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. பூஜையில் ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீன ராசிக்காரர்கள் தட்சிணாமூர்த்திக்கு பரிகார பூஜை செய்து வழிபட்டனர். பூஜையை கணேசன் பட்டர், சுப்பிரமணியன் பட்டர் நடத்தினர்.
கம்பாநதி காமாட்சி அம்மன் கோயில்: நெல்லை டவுன் கம்பாநதி காமாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்தின் போது புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட தட்சிணாமூர்த்திக்கு முதன்முறையாக நேற்று மாலை குரு பெயர்ச்சி விழா நடந்தது. இதனை முன்னிட்டு மாலை சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் அலங்கார ஆராதனை நடந்தது. இதில் டவுன் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். ஏற்பாடுகளை கம்பாநதி காமாட்சி அம்மன் கோயில் கைங்கர்ய சபா தலைவர் சிவசைலநாதன் தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர். நெல்லை ஜங்ஷன், வண்ணார்பேட்டை , தச்சநல்லூர் சிவன் கோயில்கள், மேலநத்தம் அக்னீஸ்வரர் கோயில், குறிச்சி சொக்கநாதர் கோயில் உட்பட மாநகர பகுதியில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் நேற்று மாலை குரு பெயர்ச்சி கோலாகலமாக நடந்தது.