ஒருமுறை தாவரவியல் நிபுணர் ஒருவர் மகாசுவாமிகளை தரிசிக்க காஞ்சிபுரம் வந்தார். பக்தர்கள் வரிசையில் தீர்த்தம் பெற்றுக் கொண்டிருந்தனர். நிபுணரும் வரிசையில் நடக்கத் தொடங்கினார். இளைஞன் ஒருவன் அவருக்கு முன்னதாக நின்றிருந்தான். அவன் முறை வந்ததும் சுவாமிகளை வணங்கி விட்டு பேசத் தொடங்கினான். அவனது வீட்டில் மாமரம் இருப்பதாகவும், அது ஆண்டுதோறும் பூத்தாலும் பூக்கள் கருகி விடுகிறதே ஒழிய காய் பிடிக்கவில்லை என வருத்தப்பட்டான். ‘மாமரம் காய்க்க என்ன செய்ய வேண்டும்?` என சுவாமிகளை கேட்டான். தாவரம் தொடர்பான சந்தேகம் என்பதால் நிபுணருக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஆன்மிகம் தவிர்த்த விஷயங்களுக்கு சுவாமிகள் எப்படி பதிலளிப்பார் என்பதை அறிய காதை தீட்டிக் கொண்டு நின்றார். கலகல என்று சிரித்த மகாசுவாமிகள், ‘‘அப்படியா? பேசாம இன்னும் இரண்டு மாங்கன்றுகளை அதன் அருகில் நட்டு விடு. புதிதாக வைத்த மரத்தோடு ஏற்கனவே உள்ள மரமும் சீக்கிரமே காய்க்கத் தொடங்கும்’ ` இளைஞனும் அங்கிருந்து விடைபெற்றான். அடுத்து நிபுணரின் முறை வந்தது. சுவாமிகளை வணங்கிவிட்டு, ‘சுவாமி! நீங்க சொன்னதைக் கேட்டேன். காய்க்காத மாமரம் எப்படி காய்க்கத் தொடங்கும்?’ எனக் கேட்டார். ‘‘சில மரங்களில் பெண்பூக்கள் நிறைய இருக்கும். ஆண் பூக்கள் இருக்காது. வேறு சில மரங்களில் ஆண் பூக்கள் இருக்கும். பெண் பூக்கள் இருக்காது. இப்படி தனிமரமாக இருந்தால் மகரந்தச் சேர்க்கை ஏற்படாமல் பூக்கள் எல்லாம் உதிர்ந்து விடும். ஒரே இடத்தில் நிறைய மரங்கள் இருந்தால் இப்படி பிரச்னை ஏற்படாது. எல்லா மரங்களில் உள்ள பூக்களையும் தேனீக்கள் மொய்க்கும் இல்லையா? எனவே மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டு காய்க்கத் தொடங்கும். இதற்காகவே இரண்டு கன்றுகளைக் காய்க்காத மரத்தின் அருகில் வைக்கச் சொன்னேன்’’ என்றார் பெரியவர். விளக்கம் கேட்ட நிபுணர் மலைத்துப் போனார்