பதிவு செய்த நாள்
02
செப்
2020
03:09
ராமநாதபுரம்: மனச்சோர்வு, மனஉளைச்சல், மனபாரம் எல்லாவற்றிற்கும் மாமருந்து கடவுள் பக்தி. கோயிலில் நுழையும் போதுமனப்பூட்டு கழன்று எதிர்மறை சிந்தனைகள் விடுபடும். சர்வமும் நீயே… என்று மனசு சரணாகதி அடையும். மீனாட்சி அம்மனை ஐந்து மாதங்களாக தரிசிக்காமல், மூச்சு முட்டி கிடந்த பக்தர்களின் வேண்டுதலுக்கு அன்னை செவிசாய்த்து விட்டாள். கோயில்கள் திறக்கப்பட்டன. வேறென்ன வேண்டும் எங்களுக்கு என பெண்கள் தரிசனத்துக்கு படையெடுத்தனர். அன்னையை தரிசித்த, தரிசிக்க போகும் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர்.
கொரோனா விரைவில் மறையும்: கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்க ஊரடங்கு காரணமாக நான்கு மாதங்களாக கோயில்களில் சுவாமி தரிசனம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. விநாயகர் சதுர்த்தி, ஆடிவெள்ளி வழிபாடு ஆகிய முக்கிய நாட்களில் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் தவித்தோம். இந்நிலையில் நேற்று பவுர்ணமி நல்லநாளில்நீண்ட நாட்களுக்குபின் வழிவிடு முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தது மனதிற்கு நிறைவை தந்துள்ளது. கொடியநோய் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பக்தர்கள் வேண்டுகின்றனர். - ஜி.அனிதா, ராமநாதபுரம்
மனஉளைச்சலில் இருந்து விடுதலை: தினமும் ஈஸ்வரனை வணங்கிய பின் தான், பிற பணிகளை துவங்குவேன். ஊரங்கினால் 5 மாதமாக கடவுளை தரிசிக்க முடியாதது, பெரும்இழப்பாக இருந்தது. குடும்பத்துடன் வீடுகளில் முடங்கியும், வருவாய் இன்றி பரிதவித்த எங்களுக்கு கோயிலில் கடவுளை தரிசித்து முறையிட முடியாமல், நிம்மதி இன்றி தவித்தோம். இன்று ராமர் பூஜித்த ஈஸ்வரனை கண்டு தரிசித்தது பெரும் பாக்கியமாக உள்ளது. மனக் கவலை நீங்கி, மன உளைச்சலில் இருந்து விடுதலை பெற்றது போல் உள்ளது. - அரியநாச்சியார், பரமக்குடி
படிப்படியாக கொரோனா குறையும்: 5 மாதத்திற்கு பிறகு தற்போது சுவாமி தரிசனம் செய்ய அனுமதி கிடைத்துஉள்ளது. குடும்பத்தோடு திருப்புல்லாணி பெருமாளை தரிசனம் செய்ய வந்துஉள்ளோம். கோயிலுக்கு வந்து செல்வது மனதிற்கு ஆத்ம திருப்தி அளிக்கிறது. பக்தர்களின் வேண்டுதலின்படி, படிப்படியாக கொரோனாவின் தாக்கம் குறையவேண்டும் சமூக இடைவெளியுடன், கூட்டம் இன்றி தரிசனம் செய்துள்ளோம். - எம்.காவியா, திருப்புல்லாணி
இனி பயமில்லாமல் தரிசனம்: தொடர்ந்து விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால், குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்யும் நடைமுறைகள் விடுபட்டன. மேலும் வீடுகளில் சுவாமி தரிசனம் செய்தாலும், கோயிலுக்கு சென்றால் தான் மனநிறைவு உண்டாகும். அனுமார் கோதண்டராமசாமி கோயிலில், சானிடைசரால் கை கழுவுதல், கால் கழுவியபின் உள்ளே செல்லும் நடைமுறை மற்றும் முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தியுள்ளனர். இதனால் எந்த பயமும் இன்றி கோயிலுக்கு செல்ல முடிகிறது. - திலகவதி, பரமக்குடி
வணங்கிய பின் நிம்மதி: ஐந்து மாதங்களுக்கு பிறகு நேற்று கோயிலை திறந்த போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தினமும் கோயிலுக்கு செல்லும் பழக்கம் எனக்கு உண்டு. ஐந்து மாதங்களாக சுவாமியை தரிசனம் செய்யாதது கவலையாக இருந்தது. நேற்று காலை6:00 மணிக்கு முதல் வேலையாக கோயிலுக்கு சென்று திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரையும், சிநேகவல்லி அம்மனை வணங்கிய பிறகு தான் மனதுக்கு நிம்மதியாக இருந்தது. - ஜெ.சித்ரா, திருவாடானை