பதிவு செய்த நாள்
03
செப்
2020
12:09
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டு வரும், விரைவு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை, 1,000 டிக்கெட் கூடுதலாக உயர்த்தி உள்ளது.
கோவிட்-19 விதிமுறைகளில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளின்படி கடந்த ஜூன், 11ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, தேவஸ்தானம் பக்தர்களை அனுமதித்து வருகிறது. முதலில் ஆன்லைன் மூலம் ஒரு நாளைக்கு, 3,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்தநிலையில், அதன் எண்ணிக்கையை, 9,000 வரை உயர்த்தியது. திருப்பதியில் உள்ள பூதேவி காம்பளக்சில், 10 கவுன்டர்களை ஏற்படுத்தி ஒருநாள் முன் பெற்றுக் கொள்ளும் விதம் இலவச தரிசன டோக்கன், 3,000 வரை வழங்கி வருகிறது. தற்போது பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேவஸ்தானம் நேற்றுமுதல் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட்டுகளின் எண்ணிக்கை ஒருமணி நேரத்திற்கு, 100 என ஒரு நாளைக்கு, 1,000 விரைவு தரிசன டிக்கெட்டுகளை இணையதள முன்பதிவில் கூடுதலாக வெளியிட்டுள்ளது. அதன்படி, 10 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது.