திருவண்ணாமலையில் ரமணர் பற்றிக் கேள்விப்பட்ட பக்தர் ஒருவர் தரிசிக்க வந்தார். அப்போது ரமணருக்கு வயது 20. ‘‘சுவாமி! துறவியாக வாழ்பவர் வெள்ளை ஆடை உடுத்தக் கூடாது. தீட்சை பெற்று காவியுடை அணிவது அவசியம். தங்களுக்கு தீட்சை வழங்க குருநாதர் ஒருவரை ஏற்பாடு செய்யட்டுமா?’’ என பக்தர் கேட்டார். இதைப் பற்றிய சிந்தனை இல்லாமல் மவுனம் காத்தார். அப்போது புத்தக மூட்டையுடன் வந்தார் முதியவர் ஒருவர். அவர் ரமணரிடம் ஒரு மூட்டையை கொடுத்து விட்டு, திரும்பி வரும் போது அதை பெற்றுக் கொள்வதாக சொல்லி புறப்பட்டார். அதில் ‘அருணாசல மகாத்மியம்’ என்னும் புத்தகம் இருப்பதைக் கண்டார் ரமணர். அதை புரட்டிய போது அண்ணாமலையாரே பதிலளிப்பது போல, ஸ்லோகம் ஒன்று இருந்தது. ‘‘திருவண்ணாமலையில் இருப்பவர் யாராக இருந்தாலும் தீட்சை பெறாமலேயே சிவபெருமானின் அருளால் நற்கதி கிடைக்கும்’’ என்றிருந்தது. அண்ணாமலையாரின் பதிலை அறிந்து ரமணரிடம் மன்னிப்பு கேட்டார் பக்தர்.