பதிவு செய்த நாள்
09
செப்
2020
09:09
வடபழநி ஆண்டவர் கோவிலுக்கு, பல மாவட்டங்களில் இருந்து வரும் ஏராளமான பக்தர்கள், தங்களின் வாகனங்களை நிறுத்த, அரசு உரிய இடம் ஒதுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநிக்கு நிகரான சென்னை, வடபழநி ஆண்டவர் கோவில், மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு, உள்ளூர் மற்றும் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளாமான பக்தர்கள், தினசரி தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர்.
பாதுகாப்பு இல்லை: இதில், பெரும்பாலான பக்தர்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர்.கோவிலுக்கு, முறையான, பார்க்கிங் வசதி இல்லாததால், மாடவீதிகளிலும், குளத்தை சுற்றியும் நிறுத்துகின்றனர். அவ்வாறு பாதுகாப்பின்றி நிறுத்துவதால், வாகனங்களும், அதன் உதிரி பாகங்களும் திருடப்படுகின்றன. இதையடுத்து, பாதுகாப்பான வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன்படி, மாநகராட்சி அனுமதியுடன், வடக்கு மாட வீதியில், பக்தர்களின் இருசக்கர வாகனங்கள் நிறுத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டது.
தடை உத்தரவு: இதனிடையே, தனது சுயநலத்திற்காக, குடியிருப்புவாசி ஒருவர், உண்மைக்கு புறம்பான தகவலை உயர் நீதிமன்றத்தில் அளித்து, இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்க, தற்காலிக தடை உத்தரவு பெற்றுள்ளார்.இந்நிலையில், ஐந்து மாதங்களுக்கு பின், கோவில்களில், பக்தர்கள் தரிசனத்திற்கு அரசு அனுமதி அளித்தது. இதில், நேற்று முதல் கிருத்திகை என்பதால், வடபழநி ஆண்டவர் கோவிலில், நேற்று ஏராளமான பக்தர்கள் கூட்டம் திரண்டது. கொரோனா பாதுகாப்பு கருகி, ஏராளமானோர் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் கோவிலுக்கு வந்தனர்.
கோரிக்கை: அவர்களின் வாகனங்களை நிறுத்த வழியின்றி தவித்தனர். வழபழநி ஆண்டவரை தரிசிக்க வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த, அரசு முறையான, வாகன நிறுத்துமிட வசதி செய்து தர வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, பல்வேறு வசதிகளை நிர்வாகம் செய்து கொடுக்கிறது. ஆனால், வாகனங்களை நிறுத்த வசதி இல்லாமல் உள்ளது. குறைந்தபட்சம், இருசக்கர வாகனங்களை நிறுத்தவாவது வசதி செய்து கொடுக்க வேண்டும். - சத்யா, புரசைவாக்கம்.
கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த, வாகன நிறுத்துமிடம் மிகவும் அவசியம். கோவில் மாடவீதிகளிலோ, குளத்தை சுற்றியோ இருசக்கர வாகனத்தையாவது பாதுகாப்பாக நிறுத்த வழி செய்ய வேண்டும். - சங்கீதா, துபாய்.
பழநிக்கு நிகரானது: வடபழநி ஆண்டவர் கோவில். இக்கோவிலுக்கு, அடிக்கடி குடும்பத்துடன் வருகிறேன். ஆனால், தரிசனம் செய்வதை விட, வாகனத்தை இடம் பார்த்து நிறுத்துவது தான் பெரும் கஷ்டமாக உள்ளது. கோவில் நிர்வாகம், அதற்கு உரிய வசதிகள் செய்ய வேண்டும். - ரவி, அரும்பாக்கம்.
கோவிலுக்கு வந்தால், வாகனத்தை இடம் தேடி நிறுத்தவே அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. மேலும், பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. எனவே, வாகனத்தை நிறுத்த, பிரத்யேக இடம் மிகவும் அவசியம். கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - அய்யப்பன், பெரம்பூர்.
கோவிலுக்கு தரிசிக்க வருபவர்களை போல, நேர்த்திக்கடன் செய்ய வருபவர்களும் அதிகம். அந்த அளவிற்கு, பிரசித்தி பெற்ற இங்கு, வாகன நிறுத்தம் இல்லாதது, மிகப்பெரிய குறை. - ஜோதிமணி, கொளத்துார்.
வடபழநி ஆண்டவர் கோவிலுக்கு வருபவர்கள், பெரும்பாலும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் தான் வருகின்றனர். கண்ட இடத்தில் வாகனங்களை நிறுத்துவதால், கோவிலை சுற்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை முறைப்படுத்துவது அவசியமாகிறது. - லோகேஷ்வரி, வியாசர்பாடி.
பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு, வாகன நிறுத்தம் மிகவும் அவசியம். அதுவும், தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும், வடபழநி ஆண்டவர் கோவிலுக்கு, நிச்சயம் வாகன நிறுத்துமிடம் தேவை. சம்பந்தப்பட்ட துறை சிறப்பு முயற்சி எடுக்க வேண்டும். - பிரியங்கா, போரூர்.
கோவில் குளத்தை சுற்றி, ஏராளமான தனியார் வாகனங்கள், மாதக்கணக்கில் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றை அகற்றி, பக்தர்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். - கலைவாணன், புரசைவாக்கம்.
பிரசித்தி பெற்ற கோவிலுக்கு, வாகன நிறுத்துமிடம் இல்லாதது துரதிருஷ்டவசமானது. எனவே, கூடிய விரைவில் வாகனங்களை நிறுத்த வசதி செய்து கொடுக்க வேண்டும். - பவுன்பிரியா, மீனம்பாக்கம்.
பக்தர்களின் வாகனங்களை நிறுத்த, முறையான இடம் தேர்வு செய்து கொடுத்தால், கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் இன்னும் அதிகரிக்கும். அறநிலையத்துறை தான் யோசிக்க வேண்டும். -ஜானகிராமன், கோடம்பாக்கம்.