நாமக்கல்: புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நாமக்கல்லில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஊரடங்கால் கடந்த, ஐந்து மாதங்களாக மூடப்பட்டிருந்த கோவில், கடந்த, 1ல் திறக்கப்பட்டது. நேற்று, புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு ஆஞ்சநேயர் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் திரளாக வந்தனர். சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தங்க கவச அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியில் நிறுத்தப்பட்டு கோவிலுக்குள் அனுப்பப்பட்டனர்.
* மோகனூர் காவிரி ஆற்றில் உள்ள படித்துறையில் ஆண்டுதோறும் மகாளய அமாவாசையை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம், தற்போது நிலவும் கொரோனா தொற்று பரவல் காரணமாக நடப்பாண்டு தர்ப்பணம் செய்வதற்கு அரசு அனுமதிக்கவில்லை. அதனால் ஏராளமான பொது மக்கள், காவிரி ஆற்றுக்கு வந்தனர், ஆனால் அரசு அனுமதி இல்லை என கூறி போலீஸாரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும் சிலர், ஆற்றின் வேறு பகுதிகளில் தனியாக சென்று தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபாடு செய்தனர். குமாரபாளையம், ப.வேலூர் காவிரியில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து பொதுமக்கள் நீராடினர்.