புரட்டாசி சனிக்கிழமைகளில் பரிக்கல் லக்ஷ்மி நரசிம்மரை தரிசிக்க பக்தர்களுக்கு தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2020 11:09
உளுந்தூர்பேட்டை: பரிக்கல் லக்ஷ்மி நரசிம்மர் சுவாமி கோவிலில் புரட்டாசி சனிக் கிழமைகளில் கோவிலுக்குள் பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பரிக்கல் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுவாமியை தரிசிக்க வருவது வழக்கம். குறிப்பாக புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சுவாமியை தரிசிக்க பக்தர்களின் வருகை அதிகமாகவே இருக்கும். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் 25 ம் தேதி முதல் 6 மாதங்களாக கோவில் திறக்கப்படாமல் மூடியே இருந்து வந்தது. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால் கோவில்கள் திறக்கப்பட்டு சுவாமி தரிசனம் நடந்து வருகிறது.
அதே நேரத்தில் கோவில்களில் சமூக இடைவெளிகளுடனும். மாஸ்க் அணிந்தும் கட்டுப்பாடுகளுடன் கோவில்களினல் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் புரட்டாசி சனிக்கிழமைகளில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருவதால் கொரோனா தொற்று பரவல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் கோவிலுக்குள் வரவேண்டாம் எனவும். கொரோனா தொற்று பரவல் காரணமாக தடை விதிக்கப்படுகிறது என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண் குராலா உத்திரவிட்டுள்ளார். அதற்கான உத்தரவு கடிதத்தை கோவில் நுழைவு வாயில் முன்பு கோவில் நிர்வாகத்தினர் ஒட்டி வைத்துள்ளனர். எனவே பக்தர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் வழக்கம்போல் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.