பதிவு செய்த நாள்
23
செப்
2020
05:09
பக்தர்கள் வருகையின்றி, ஐந்து மாதங்கள் முடங்கி போனதால், கோவில்களில் ஏலம் எடுத்தவர்கள், வருமானம் இன்றி தவிக்கின்றனர். அதனால், ஏல காலத்தை, மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில், 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. அதில், பிரசித்தி பெற்ற, வருமானம் அதிகமுள்ள கோவில்களில் பிரசாத, ஸ்டால் நடத்தவும்; முடி காணிக்கை செலுத்துபவர்களுக்கு மொட்டை அடிக்க; கோவில் வளாகத்தில் தற்காலிக கடைகள் நடத்துவதற்கு என, பல வகைகளில் ஏலம் விடப்பட்டு, கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் ஈட்டப்படுகிறது.
இதற்கான ஏலம், ஓராண்டு காலத்திற்கு, ஆண்டுதோறும் ஜூலையில் விடப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஏலத்தொகை, 15 சதவீதம் உயர்த்தப்பட்டு வருகிறது.இதன்படி, 2019 ஜூலையில் ஏலம் விடப்பட்டது. அதில், அதிகபட்சமாக, 1 கோடி ரூபாய் வரை செலுத்தி, ஏலம் எடுத்து உள்ளனர். இந்நிலையில், கொரோனா தொற்றை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், மார்ச், 20 முதல், ஆக., 31ம் தேதி வரை கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
செப்., 1 முதல், பக்தர்கள் தரிசனத்திற்கு, கட்டுப்பாட்டுடன் அனுமதி அளிக்கப்பட்டது. இதில், 10 வயதிற்கு உட்பட்ட, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.அதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம்வெகுவாக குறைந்துள்ளது. அடுத்த சில மாதங்களில், மழைக்காலம் தொடங்குவதால் பக்தர்கள் வருகை மேலும் குறையும். கோவில்களில் ஏலம் எடுத்தவர்கள், அவர்களை நம்பியுள்ள குடும்பங்கள் பெரும் பொருளாதார சிக்கலில் தவித்து வருகின்றன. இதற்கு தீர்வாக, ஏல காலத்தை ஆறு மாதங்கள்நீட்டிக்க வேண்டும் அல்லது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட, 103 நாட்களுக்கான ஏலத்தொகையை திரும்ப அளிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
-- நமது நிருபர் --