பதிவு செய்த நாள்
22
மே
2012
10:05
மதுரை: மனிதன் நினைப்பது நடப்பதில்லை. இறைவன் நினைப்பதே நடக்கும். பணம் சம்பாதிப்பது வரை, பலரும் நம்மைச் சுற்றி வருவர் என, சிருங்கேரி ஜகத்குரு பாரதி தீர்த்த சுவாமி, அருளுரை வழங்கினார். மதுரை, பை-பாஸ் ரோடு சிருங்கேரி சாரதா மடத்திற்கு, நேற்று சுவாமிகள் விஜயம் செய்தார். அங்கு அவர் பேசியதாவது: மதுரை நகரம் பரிசுத்தமானது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருட்கடாட்சம் பரவியிருக்கிறது. பகவான் தனது அருளை, இங்கு விசேஷமாக அனுக்கிரகிக்கிறார். ஆதிசங்கரர் இங்கு வருகை புரிந்திருக்கிறார். சாரதா பீட ஜகத்குருக்கள் வந்துள்ளனர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு, இங்கு வந்திருக்கிறேன். இது ஈஸ்வர கிருபையால் நடந்தது. பணத்திற்கு தவம்: மனிதன் நினைப்பது நடப்பதில்லை. நாம் நினைப்பது நடந்தால், பூமியில் நடக்க மாட்டோம். ஈஸ்வரன் நினைப்பதே நடக்கும் என, மனிதனுக்குத் தெரிந்தாலும், "நான் என்னும் அகங்காரம் அவனுக்குள் இருக்கிறது. பல சந்தர்ப்பங்களில் மனிதன் நினைப்பது நடக்காமல் போனாலும், அவனுக்குப் புத்தி வரவில்லை. அவன் நினைத்தது நடக்க வேண்டுமானால், மிகுந்த சாமர்த்தியம் வேண்டும். அந்த சாமர்த்தியத்தை பெற, தவம் செய்ய வேண்டும். இந்திரியங்களை அடக்க வேண்டும். இப்போது, பணம் வேண்டும் என்பதற்காக தவம் செய்கின்றனர். ஆனால், நம் முன்னோரோ பரமாத்மாவை நினைத்து தியானம் செய்தனர். பகவானுக்கு யார் மீதும் பாரபட்சம் இல்லை. தற்போது, பக்தி மிகவும் குறைந்து விட்டது. நாம் செய்யும் தவம், பூஜை மற்றவர் பார்க்க அல்ல. இறைவனுக்காக அவற்றைச் செய்ய வேண்டும். எனது பெயர் வரவேண்டும், நான்குபேர் என்னைப்பற்றி பேச வேண்டும் என்ற கொள்கையை மாற்றி விட்டு, "என்னை யாரும் புகழ வேண்டாம்; நான் பகவானுக்காகச் செய்கிறேன் என்ற உணர்வை, வளர்த்துக் கொள்ள வேண்டும். "இது வேண்டும், அது வேண்டும் என்ற சங்கல்பமும் கூடாது. பணம் மட்டும் இருந்தால், நாம் வாழவே முடியாத நிலைமை ஏற்படும். வயதானால் தான் துக்கம் தெரியும். பணம் சம்பாதிக்கும் வரை, நம்மைப் பலரும் சுற்றி வருவர். அது நின்றதும், வீட்டில் கூட யாரும் பேசுவதில்லை. தந்தையை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகின்றனர். மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும் பலரும், தாங்கள் கடைபிடிப்பதில்லை. பகவான் சேவை, குருசேவை செய்து, இறைவனின் நல்லருள் பெறவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நரசிம்ஹ பாரதீ சுவாமியின் ஆராதனையை நடத்தி வைக்கிறார்.