பதிவு செய்த நாள்
23
மே
2012
10:05
திருத்தணி முருக பெருமானை தரிசிக்க, இணையம் மூலம் விரைவு அனுமதி சீட்டை பெறும் வசதி துவங்கப் பட்டு உள்ளது. இது ஜுன் 1ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என, கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதனால், நெரிசல் மிகுந்த விசேஷ நாட்களில், பக்தர்கள் விரைவு அனுமதி சீட்டு வாங்குவதற்கு முன்னதாகவே கோவிலுக்கு வந்து வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாக திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்து உள்ளது. முருக பெருமான் இங்கு தான் சினம் தணிந்து, வள்ளியை திருமணம் செய்து கொண்டார். சிறப்பு வழிபாடு முன்பதிவுஇந்த கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், புதுச்சேரி உட்பட பல்வேறு இடங்களிலிருந்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிபட்டு செல்கின்றனர்.தற்போது, விரைவு தரிசனத்திற்கு, 100, 50 மற்றும் 25 ரூபாய் மதிப்பில், சிறப்பு அனுமதி சீட்டுகள் விற்பனை செய்யப் படுகின்றன. இது தவிர, பக்தர்கள் தங்குவதற்காக அமைக்கப் பட்டு உள்ள குடில்கள், அபிஷேகம், தேர் இழுத்தல், திருக்கல்யாணம் போன்றவற்றுக்கும் முன்பதிவு சீட்டுகள் விற்பனை செய்யப் படுகின்றன. இவற்றை, பக்தர்கள் திருத்தணி மலைக்கோவிலுக்கு நேரிடையாக வந்து வாங்க வேண்டி உள்ளது. இதனால், அண்டை மாநில பக்தர்கள் மற்றும் வெளியூர் பக்தர்கள் அபிஷேகம், திருக்கல்யாணம் மற்றும் குடில்கள் முன்பதிவு செய்ய, இருமுறை திருத்தணிக்கு வந்து செல்ல வேண்டி இருந்தது. இதை எளிமையாக்கும் வகையில், கோவில் நிர்வாகம், இணையம் மூலம் விற்பனை மற்றும் முன்பதிவு செய்யும் வசதியை துவங்க உள்ளது. இணையம் மூலம்புதிய திட்டம் குறித்து, கோவில் இணை ஆணையர், தனபால் கூறும் போது,முதற்கட்டமாக, தரிசன அனுமதி சீட்டுக்கு மட்டும் இணையம் மூலம் பதிவு துவங்கி உள்ளோம். வரும் ஜூன் மாதம் முதல், தீதீதீ.tடிணூதttச்ணடிஞ்ச்டிட்தணூதஞ்ச்ண.ணிணூஞ் என்ற இணையதளத்தில் சிறப்பு தரிசன அனுமதி சீட்டுகள், அபிஷேகம், திருக்கல்யாணம், தங்க, வெள்ளித் தேர் மற்றும் குடில்கள் ஆகியவை முன்பதிவு செய்யவும் வசதி ஏற்பாடு செய்யப் பட்டு உள்ளது, என்றார்.
பிரசாதக்கடை ஏலம்: திருத்தணி முருகன் கோவிலில் பிரசாதக்கடை மற்றும் காணிக்கை தலைமுடி ஏலம், இம்முறை அதிக ரூபாய்க்கு ஏலம் போனது. திருத்தணி முருகன் கோவிலில் நடப்பு ஆண்டுக்கான பிரசாதக்கடை மற்றும் காணிக்கை தலைமுடி ஏலம், நேற்று கோவில் இணை ஆணையர் தனபால் முன்னிலையில் நடந்தது. இதில் பிரசாதக்கடை, ஒரு கோடியே, ஒரு லட்ச ரூபாய் ஏலம் போனது. இதை ஒப்பந்ததாரர் ராமன் ஏலம் எடுத்தார். கடந்தாண்டு இதே கடை, 83 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது. இதேபோல் காணிக்கை தலைமுடி, ஒரு கோடியே, 71 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்ததாரர் ஆறுமுகம் என்பவர் ஏலம் எடுத்துள்ளார். இது கடந்தாண்டு, ஒரு கோடியே, 43 லட்சத்து ஏலம் போனது. கடந்தாண்டை விட, 28 லட்ச ரூபாய் கூடுதலாகும்.