திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்ற தமிழக பக்தருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, கடந்த 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. பக்தர்கள் தரிசனத்திற்காக அக்.,17 காலை 5 மணி முதல் 21ம் தேதி வரை தினமும் பூஜைகள் நடைபெறும் என்றும், ஆன்லைனில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களில் தினமும் 250 பேர் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்யும்போது 48 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை நடத்திய சான்றிதழை இணைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. மேலும், சபரிமலை வந்த பின்னரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சபரிமலையில் நேற்று நடந்த பரிசோதனையில், தமிழக பக்தர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவர், பத்தனம்திட்டாவில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டார். இவர் தனியாக வந்ததால், மற்றவர்களுக்கு தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.