தட்சன் யாகம் நடத்திய போது, அதற்கு தன் மருமகன் சிவனை அழைக்கவில்லை. இதைத் தட்டிக்கேட்க, அவனது மகள் தாட்சாயிணி (பார்வதி) சென்றாள். ஆனால் அவள் தந்தையால் அவமானப்படுத்தப்பட்டாள். யாகத்தை தடுக்க தாட்சாயிணி வேள்வி குண்டத்தில் குதித்தாள். உடனே சிவன் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பி தட்சனை தண்டித்தார். பின், தன் மனைவியின் உடலை கையில் தாங்கியபடி ருத்ர தாண்டவம் ஆடினார். அப்போது, அவளது ஒவ்வொரு அங்கமும் பூலோகத்தில் ஒவ்வொரு இடத்தில் விழுந்தது. அவையே சக்திபீடங்களாக விளங்குகின்றன. அதில் நாக்கு விழுந்த இடம் ஜ்வாலாமுகி. இங்கு கருவறையில் நெருப்புக்கு பூஜை செய்யப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் காங்கரா மாவட்டத்தில் ‘ஜ்வாலாமுகி’ என்னுமிடத்தில் கோயில் உள்ளது. இக்கோயில் கோபுரம் தங்கத்தால் ஆனது. கதவுகளுக்கு வெள்ளி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.