வசுதேவருக்கும், தேவகிக்கும் மதுராபுரி சிறையில் கிருஷ்ணர் பிறந்தார். அதே சமயத்தில், கோகுலத்தில் நந்தகோபருக்கும், யசோதைக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. கிருஷ்ணரை கூடையில் வைத்து நந்தகோபரிடம் ஒப்படைத்து விட்டு, பெண் குழந்தையை வசுதேவர் எடுத்து வந்து விட்டார். அது, தங்களுக்கு பிறந்ததாக வசுதேவர் தம்பதியர் கம்சனிடம் தெரிவித்தனர். கம்சனும் அதன் காலைப் பிடித்து சுழற்றி வான் நோக்கி வீசி எறிந்தான். அப்போது அந்தக் குழந்தை காளியாக மாறி கம்சனை எச்சரித்து மறைந்தது. இந்த அம்மனுக்கு குஜராத் மாநிலம் கன்வா என்ற ஊரில் கோவில் எழுப்பியுள்ளனர். இதை ‘பாலா’ கோவில் என்கின்றனர். தினமும் இந்த அன்னைக்கு விதவிதமான அலங்காரம் உண்டு. இதில் சேவல் மீது அமர்ந்த கோலத்தைக் காண பக்தர்கள் அலை மோதுவர். இந்த அலங்காரத்தில் பாலாவை தரிசித்தால், சேவல் கூவி பொழுது விடிவது போல, வாழ்விலும் விடியல் வரும் என நம்புகின்றனர்.