தஞ்சாவூர்: கோயில்களிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது என்பதற்கு சான்றுகள் உள்ளன என வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பரமணியன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: திருப்பதி திருமலைக்கோயிலில் கி.பி. 1542ம் ஆண்டில் தமிழில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் திருப்பதி திருவேங்கடவனுக்கு "தீவாளி நாள் அதிரசப்படி இரண்டு" என்ற அமுதுபடி கட்டளை பற்றிக் குறிக்கப்பெற்றிருப்பதாகவும் அதன்படி 478 ஆண்டுகளுக்கு முன் தீபாவளி நாளில் இறைவனுக்கு அதிரசம் படைக்கப்பெற்றது என்பதை அறிய முடிகிறது.
அதே போல் 18ம் நுாற்றாண்டில் திருவாரூர் மாவட்டத்தில் சித்தாய்மூர் மாகாணத்திலிருந்த நத்தப்பள்ளம், பள்ளியமூலை, பனங்காடி, சூரமங்கலம், உத்திரங்குடி, செம்பியமணக்குடி, முத்தரசநல்லுார் உள்ளிட்ட 26 ஊராரும் ஜாதி வேறுபாடின்றி சித்தாய்மூர் பொன்வைத்தநாதர் என்ற இறைவனுக்கு தீபாவளி அபிஷேகம் உள்ளிட்ட விழாக்களை நடத்தியுள்ளனர். இறைவனுக்காக இலுப்பை தென்னை முதலிய மரங்களை நட்டும் தொண்டு புரிந்துள்ளனர். பல கிராம மக்களும் அரசு அலுவலர்களும் பெறும் கூலியிலிருந்து ஒரு சிறு தொகையை ஒதுக்கி ஆண்டுதோறும் தீபாவளி நாளில் சிறப்பு அபிஷேகம் போன்ற விழாக்களை நடத்தியுள்ளனர். தீவாளி அபிஷேக விழா என கி.பி. 1753 டிசம்பர் 7ம் தேதி எழுதப்பெற்ற செப்பேட்டு சாசனம் கூறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.