பதிவு செய்த நாள்
04
நவ
2020
11:11
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ.11.64 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் எடை குறைந்ததால் ஊழியர்கள் 30 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோயிலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் ஏராளமானவைகள் உள்ளன. இதனை 2019 அக்.,ல் அறநிலைதுறை அதிகாரிகள் முன்னிலையில் நகை மதிப்பீட்டாளர்கள் கணக்கெடுத்தனர்.இதில் தங்கத்தில் ரூ.2.14 லட்சம், வெள்ளியில் ரூ.9.5-0 லட்சம் மதிப்பில் எடை குறைந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அறநிலைதுறை உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பினர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் கோயிலின் டபேதார், கைங்கரியம், குருக்கள் என 30 பேருக்கு, ஆபரணங்கள் எடை குறைந்தது விளக்கமளித்து, அதற்கான இழப்பு தொகையை செலுத்திட வலியுறுத்தி ராமேஸ்வரம் கோயில் அதிகாரி நோட்டீஸ் அனுப்பினார். இதுகுறித்து கோயில் அதிகாரி கூறுகையில்,1976ல் கோயிலில் நகை மதிப்பீடு செய்த பின் 2019ல் மறுமதிப்பீடு செய்தனர். கடந்த 43 ஆண்டுகளில் திருவிழாவுக்கு சுவாமி, அம்மனுக்கு ஆபரணங்கள் அணிவித்தல், வாகனங்கள் வீதி உலா உள்ளிட்ட நிகழ்வுகளால் தங்கம், வெள்ளி தேய்மானம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து உயர்அதிகாரிக்கு, ஊழியர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர். மற்றபடி கோயில் ஆபரணத்தில் எந்த குழப்பம் இல்லை, என்றார்.