நமக்கு அன்னமூட்டும் தாயாக விளங்குபவள் அன்னபூரணி. காசியில் இருக்கும் இவளது கையில் பால் அன்னம் நிறைந்த பாத்திரமும், கரண்டியும் இருக்கும். தம்மை நாடிவருவோருக்கு வயிற்றுப்பசியை மட்டுமல்லாமல் ஆன்மபசியையும் போக்கி அருள்கிறாள். திருமூலர் திருமந்திரத்தில் அன்பே சிவம் என்று குறிப்பிடுகிறார். அறிவான தெய்வமே என்று இறைவனை தாயுமானவர் அழைக்கிறார்.
இந்த அன்பையும், அறிவையும் நமக்குத் தருபவள் அன்னபூரணி என்று ஆதிசங்கரர் காசி அன்னபூரணி மீது பாடிய ஸ்தோத்திரத்தில் கூறியுள்ளார். அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராண வல்லபே! ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷõம் தேஹி ச பார்வதி!! என்று அன்னத்தை மட்டுமல்லாமல், தேவியிடம் ஞானத்தையும் பிச்சையிடும்படி வேண்டுகிறார். எனக்குப் பார்வதியே அம்மா! பரமேஸ்வரனே அப்பா! பக்தர்கள் அனைவரும் சொந்த பந்தங்கள்! மூவுலகமும் என் வீடு! அன்னபூரணியாகிய அம்பிகை அருளும் யாசகத்தை மூவுலகமும் (உயிர்கள் அனைத்தும்) பெறவேண்டும், என்று உயிர்கள் மீது கொண்ட கருணையால் வேண்டுகிறார்.