பதிவு செய்த நாள்
06
நவ
2020
05:11
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் நகைகள் மறு மதிப்பீட்டில், எடை குறைவு ஏற்பட்டதாக எழுந்த சர்ச்சைக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், இணை ஆணையர் கல்யாணி விளக்கம் அளித்துள்ளார்.
அவரது அறிக்கை:கோவில் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள், 1978ல் மறுமதிப்பீடு செய்யப்பட்டன. அதன்பின், தற்போது அறநிலையத் துறை, சிவகங்கை துணை ஆணையர் - நகைகள் சரிபார்ப்பு பிரிவு - மூலம், 2019 ஜன., 29 முதல் மார்ச், 7 வரை ஒரு மாதத்திற்கு மேல், மறு மதிப்பீடு செய்யப்பட்டது.இதில், பயன்பாட்டில் இருந்த மொத்தமுள்ள, 215 நகைகளில் தேய்மானம் காரணமாக, 18 தங்க நகைகளில், 2 லட்சத்து, 11 ஆயிரத்து, 790 ரூபாய் மதிப்புள்ள, 68 கிராம் நகைகளும், 14 நகைகளில், சிறு பழுதால், 2,454 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 344 வெள்ளி பொருட்களில், 42ல் தேய்மானத்தால், 25 ஆயிரத்து, 811 கிராம் எடை குறைவு ஏற்பட்டு, 10 லட்சத்து, 93 ஆயிரத்து, 340 ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில், 12 லட்சத்து 29 ஆயிரத்து 10 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த மதிப்பீட்டிற்கும், தற்போதைய மறு மதிப்பீட்டிற்கும் இடையே, 40 ஆண்டு இடைவெளி உள்ளது. இதுவரை, 47 பேர் பணியாற்றிய நிலையில், பயன்பாடு காரணமாக, தேய்மானம் ஏற்பட்டு, எடை குறைவுக்கான இழப்பை, ஏன் தங்களிடம் வசூலிக்கக் கூடாது என விளக்கம் கேட்டு, பணியாளர்களுக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டது. இது, ஒரு வழக்கமான அலுவலக நடைமுறை. முறைகேடு எதுவும் நடைபெற்றதாக மதிப்பீட்டு அறிக்கையிலோ, பணியாளர்களுக்கு அனுப்பிய கடிதத்திலோ குறிப்பிடவில்லை. எனவே, பக்தர்களும், பொதுமக்களும், கோவில் நகை பாதுகாப்பு குறித்து, அச்சப்படத் தேவையில்லை.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.