பதிவு செய்த நாள்
07
நவ
2020
09:11
திருவனந்தபுரம்: கேரளாவின் திருவிதாங்கூர் தேவசம் போர்டு வரலாற்றில் முதன் முறையாக, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ஒருவர், கோவிலின் பூஜாரியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி அமைந்துள்ளது.இங்குள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில், பிரசித்திபெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. கேரளாவில் உள்ள பெரும்பாலான கோவில்கள், இந்த போர்டின் நிர்வாகத்தில் உள்ளன.
இந்நிலையில், இந்த போர்டு வரலாற்றில் முதன் முறையாக, பகுதி நேர அடிப்படையில் ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த, 18 பேர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர், கோவில்களின் பூஜாரிகளாக நியமிக்கப்பட உள்ளனர்.இதுகுறித்து, தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியது:தேவசம் போர்டு வரலாற்றில், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் பூஜாரியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை.தேவசம் போர்டு சார்பில் இதுவரை, 310 பகுதி நேர பூஜாரிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான தேர்வுகள் நடந்தபோது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரி பிரிவுகளில் இருந்து தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கவில்லை. இதனால் அவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு வெளியிட்டு, புதிய தரவரிசை பட்டியில் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.இதிலும், பழங்குடியினருக்கான நான்கு இடங்களுக்கு, ஒருவர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தார். அவரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.