பதிவு செய்த நாள்
09
நவ
2020
05:11
பனமரத்துப்பட்டி: திருவிழாவையொட்டி, பிடாரி அம்மன் வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தார்.
பனமரத்துப்பட்டி அடுத்த, குரால்நத்தம் பிடாரி அம்மன் கோவில் திருவிழா, கடந்த மாதம், 23ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம், அம்மனுக்கு அபி?ஷகம் செய்து, பூக்களால் அலங்காரம் செய்து, வெள்ளி கவசம் சாத்தப்பட்டது. மதியம் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளைந்த புளி, நிலக்கடலை, கத்தரி, வெண்டை, வெங்காயம் உள்ளிட்டவைகளை சூறையிட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு, கருப்பணார் சுவாமி காவு சோறு போடும் நிகழ்ச்சி நடந்தது. ஆட்டு குட்டியை அறுத்து, பொங்கல் சோற்றில் கலந்து, ஆச்சா மர உச்சியை நோக்கி காவு சோற்றை வீசினர். மேலே சென்ற சோறு, கீழ் நோக்கி வருவதில்லை. மரத்திலுள்ள சுவாமி, அச்சோற்றை பிடித்துக்கொள்வதாக, பக்தர்கள் நம்புகின்றனர். நேற்று, இரண்டாம் நாளாக, வெள்ளி கவசத்தில் அம்மன் அருள்பாலித்தார். பக்தர்கள் மொட்டையடித்து, ஆடு, கோழி பலியிட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விருந்துக்கு தடை: கொரோனா பரவலை தடுக்க, கோவில் வளாகத்தில், கிடா வெட்டி விருந்து வைக்க, கடைகள் வைக்க அனுமதி வழங்கப்படவில்லை. ஆடு, கோழி பலியிட்டு, நேர்த்திக்கடன் செலுத்திய மக்கள் வீட்டுக்கு எடுத்து சென்றனர். வெளியூர் பக்தர் வரவேண்டாம் என, கோவில் கமிட்டி தரப்பில் கேட்டுக்கொண்டதால், கூட்டம் குறைவாக இருந்தது. உள்ளூர் மக்கள், முககவசம் அணிந்து, சமூக இடைவெளியில் அம்மனை வழிபட்டனர்.