பதிவு செய்த நாள்
28
நவ
2020
05:11
ராமநாதபுரம்: ஆர்.எஸ். மங்கலம் அருகேயுள்ள ஆனந்துாரில் கி.பி., 10ம் நுாற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகேயுள்ள ஆனந்துார் சிவன் கோயிலில் புதியதாக மகாமண்டபம் கட்டும்பணி நடக்கிறது. சேதமடைந்த பழைய மகாமண்டபத்தில் இருந்த கற்கள், துாண்கள் கோயில் பகுதிகளில் சிதறிக்கிடக்கின்றன. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் ராஜகுரு அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கி.பி.10-ம் நுாற்றாண்டைச் சேர்ந்த ஒரு மகாவீரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், பசும்பொன், கமுதி, அருங்குளம், திருப்புல்லாணி, புல்லுகுடி, புல்லுார், சூடியூர், மஞ்சூர், செழுவனுார் ஆகிய இடங்களில் சமண மதம் பரவியதற்கான தடயங்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆனந்துார் சிவன் கோயிலுக்குத் தெற்கிலுள்ள குளக் கரையில், சமண மதத்தின் 24வது தீர்த்தங்கரரான மகாவீரரின் சிற்பம் உள்ளது. கருங்கல்லால் ஆன இச்சிற்பம் 3 அடி உயரம், ஒன்றரை அடி அகலம் உள்ளது. பீடத்தில் மூன்று சிங்கங்கள் உள்ளன. அதன் மேல் உள்ள சிம்மாசனத்தில் அர்த்த பரியங்க ஆசனத்தில் மகாவீரர் அமர்ந்துள்ளார். அவர் முகம் சிதைந்துள்ளது. பின்புறம் பிரபாவளி என்னும் ஒளிவட்டம் உள்ளது. தலைக்கு மேல்இருந்த முக்குடை, அசோக மரம் உடைந்து சேதமாகியுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.