திருக்கார்த்திகை திருநாளில் திருவண்ணாமலையை கிரிவலம் வரும் வாய்ப்பு எளிதில் கிடைக்காது; வாய்ப்பு கிடைத்தவர்கள் பெரும் புண்ணியசாலிகள். கார்த்திகை மகாதீபத்தைத் தரிசித்தவருக்கு மறுபிறப்பு இல்லை. ஒரு மண்டலமோ, பதினோரு நாட்களோ கிரிவலம் வருதல் சிறப்பு. முடியாதவர்கள், கார்த்திகை தீபத்திருநாள் அன்றாவது உரிய நியதிகளைக் கடைப்பிடித்து அண்ணாமலையை கிரிவலம் வந்தால்... ஒவ்வொரு அடிக்கும் ஓர் அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும். திருக்கார்த்திகையில் ஈசனுக்கு நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றால் தீபமேற்றி வழிபடுதலும், சிவாலயங்களில் உள்ள தீபங்களை வணங்குதலும் அளப்பரிய நன்மைகளைத் தரும்; அனைத்து தர்மங்களையும் செய்த பலனும், கங்கை முதலான எல்லா புண்ணிய நதிகளிலும் நீராடிய பலனும் கிடைக்கும்.
தீப தரிசனம் காணச் செல்பவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்வதுகூட மிகப்பெரிய புண்ணியத்தைத் தரவல்லது. மகாதீபத்தை பக்தியோடு தரிசித்தவரை நாம் கண்ணால் கண்டாலே நமது பாவங்கள் விலகும். எனில், தீபத்தை தரிசித்தவருக்கு எத்தகைய புண்ணியம் கிடைக்கும்?! ஆயுளில் ஒரு முறையாவது திருவண்ணாமலை மகாதீபத்தை தரிசிப்பவரது சன்னதி வளம் பெறும்; அவருக்கு மறுபிறவி என்பதே இல்லை; அத்தகையவர், மேலான தேவ நிலையினை அடைகின்றார்கள்.