கிரிவலப்பாதையில் அஷ்டலிங்கம் எனப்படும் எட்டு லிங்கங்கள் உள்ளன. அவற்றில் நான்கு முக்கியமானவை.
* இந்திரன் தனது பதவியை நிலைநிறுத்திக் கொள்வதற்காக இந்த மலையை அங்கப்பிரதட்சணமாக வலம் வந்தார். அவருக்கு ஓர் இடத்தில் அண்ணாமலையார் காட்சி தந்தார். அந்த இடத்தில் இந்திரனின் பெயரைப் பெற்று இந்திரலிங்கமாக அமர்ந்தார். புதிதாக வேலைக்கு சேர்பவர்களும், இடம் மாற்றலாகி செல்பவர்களும், பதவி உயர்வு பெறுவோரும் தங்கள் பணி தடங்கலின்றி நடக்க இந்த லிங்கத்தை வழிபடுவது வழக்கம்.
* வெப்பம் தொடர்பான நோய் உள்ளவர்கள், அக்னி லிங்கத்தை வணங்கினால் உடல் குளுமை பெறும் என்பர்.
* வருணபகவான் ஒற்றைக்காலால் அண்ணாமலையை வலம்வந்தபோது அவரைப் பாராட்டி சிவன் காட்சியளித்தார். அந்த இடத்தில் லிங்கமாக அமர்ந்தார். வருணனின் பெயரைப்பெற்று வருணலிங்கம் ஆனார். இவரை வணங்குவோர் சர்க்கரை நோய், சிறுநீரக நோய் மற்றும் தண்ணீரால் விளைகின்ற தோஷங்கள் நீங்கி நலம்பெறுவர்.
* குபேர பகவான் சிரசுக்கு மேல் இரண்டு கரங்களையும் உயர்த்தி குதிகாலை மட்டும் ஊன்றி இந்த மலையை வலம் வந்தார். அவருக்கு சிவன் லிங்கவடிவில் காட்சி தந்து குபேரலிங்கம் என பெயர் பெற்றார். சிரமப்பட்டு சேர்த்த பணம் நிலைத்து நிற்க இவரை வணங்குவர்.