காஞ்சிமடத்தில் மகாபெரியவரை தரிசிப்பதற்காக ஒரு தம்பதியர் வரிசையில் காத்திருந்தனர். உடல்நலம் இல்லாததால் மனைவி வலியால் துடிப்பது தெரிந்தது. கணவர் ஆதரவுடன் கவனித்தபடி நின்றார். மகாபெரியவரின் அருகே வந்ததும் மனைவிக்கு கண்ணீர் தளும்பியது. ‘‘ரொம்ப வலிக்கிறதா? சரியாயிடும். கவலைப்படாதே. மருந்து சாப்பிடுவது நல்லதுதான் என்றாலும் கொஞ்சம் மந்திர சக்தியும் உனக்கு தேவைப்படுது தெரிஞ்சுதா?’’ என்றார். அவளும் தலையசைத்தாள். மகாபெரியவர் தொண்டர் ஒருவரை அழைத்து, ‘அஸ்மின் பராத்மன்... என ஆரம்பிக்கும் நாராயணீய ஸ்லோகத்தை எழுதி கொண்டு வா. நாராயணீயம் எட்டாம் தசகத்துல கடைசி ஸ்லோகம்’’ என்றார். அவளுக்கு ஆறுதலாக மகாபெரியவர் பேசிக் கொண்டிருக்க ஸ்லோகம் எழுதிய காகிதத்துடன் வந்தார் தொண்டர். ஒருமுறை அதைப் படித்துக் காட்டச் சொன்னார். ‘‘அஸ்மின் பராத்மன் நநு பாத்மகல்பே த்வமித்த முத்தாபித பத்ம யோனி அனந்தபூமா மம ரோகராசிம் நிருந்தி வாதாலயவாஸ விஷ்ணோ!’’ என படித்ததும் விளக்கம் அளித்தார் மகாபெரியவர். ‘‘நாராயண பட்டதிரி எழுதிய நாராயணீய ஸ்லோகம் இது. ‘‘ேஹ! குருவாயூரப்பா!’’ என பகவானுடன் பேசுவது போல் எழுதப்பட்ட நுால் இது. நிஜமாகவே குருவாயூரப்பனுடன் அனுதினமும் பேசும் பாக்கியம் பெற்றவர் பட்டதிரி. தனக்கு ஏற்பட்ட வாத நோய் தீர குருவாயூரப்பன் மீது நாராயணீயம் பாடினார். பத்துப் பாடல் வீதம் நுாறு நாட்களுக்கு பாடினார். நுாறாம்நாள் பகவானை நேரில் தரிசித்து நோயில் இருந்து குணம் பெற்றார். இதைப் படித்தால் உடல்நலம் பெருகும். ‘‘குருவாயூரப்பனே... பாத்ம கல்பத்தில் பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! அளவற்ற மகிமை கொண்டவரே! உடல், மனம் சார்ந்த நோய்களை போக்கி நீரே என்னை நலமுடன் வாழச் செய்ய வேண்டும்’’ என்பது இதன் பொருள். நம்பிக்கையோடு ஜபிப்பவருக்கு நோய்கள் விலகும் என்று சொல்லி ஸ்லோகம் எழுதிய காகிதத்தின் மீது குங்குமம் வைத்து அந்த பெண்ணிடம் கொடுத்தார். கொஞ்ச நாள் கழித்து மீண்டும் அவர்கள் மடத்திற்கு வந்தனர். அப்போது அந்தப் பெண்ணின் முகம் பளிச்சென்று இருந்தது. ‘‘இப்போ நோய் குணமாயிடுத்துன்னு டாக்டர் சொல்லியிருப்பாரே...என்று மகாபெரியவர் ஆசியளித்தார். அந்த பெண்ணின் கண்ணில் ஆனந்தக் கண்ணீர்...