அமைதி குறித்து சிறந்த ஓவியம் வரைபவருக்கு பொற்காசு பரிசளிப்பதாக அறிவித்தார் மன்னர். ஓவியர்கள் பலர் தங்களின் ஓவியங்களை காட்சிக்கு வைத்தனர். பார்வையிட்டபடியே நடந்தார் மன்னர். மலை அடிவாரத்தில் ஏரி ஒன்றை வரைந்திருந்தார் ஒருவர். மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலிப்பது பார்க்க அழகாக இருந்தது. மற்றொருவர் பூந்தோட்டம் வரைந்திருந்தார். அதிலுள்ள பூக்கள் காண்போரை கவர்ந்தன. இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அமைதியை வெளிப்படுத்தி இருந்தனர். மன்னர் ஓரிடத்தில் நின்றார். அங்கிருந்த ஓவியத்தில் மலை மீது அருவி ஆக்ரோஷமாக கொட்டியது. பலத்த காற்றுடன் மழை பொழிந்தது. உற்று பார்த்த போது மலையடிவார மரத்தின் மீது தாயும், குஞ்சுமாக பறவைகள் கூட்டில் தங்கியிருந்தன. சம்பந்தப்பட்ட ஓவியரிடம், ‘‘ உன் ஓவியம் தத்ரூபமாக இருக்கிறது. அருவி, பலத்த காற்றுடன் மழை… கீழே மரத்தில் கூட்டில் பறவை... இதில் அமைதிக்கு ஏது இடம்?’’ எனக் கேட்டார் மன்னர். ‘‘ மன்னா! ஓரிடத்தில் இயல்பாகவே அமைதி நிலவுவதில் பெருமையில்லை. போராட்டத்தின் நடுவில் வாழ்ந்தாலும், நம்பிக்கை இழக்காமல் இருப்பதே மேலானது. இந்த பறவையின் தாய்மை உணர்வில், அதன் எதிர்கால நம்பிக்கையில் பூரண அமைதி தெரிகிறது’’ என்றார் ஓவியர். பாராட்டிய மன்னர் பொற்காசு பரிசளித்தார். போராட்டத்தின் நடுவில் இருந்தாலும் நம்பிக்கை இழக்காமல் வாழ்வதே உண்மையான, மேலான அமைதி.